• ஜூன் 28                                         

“கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி  சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல்  இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்” (ஏசாயா 51:11).

      நீங்கள் கர்த்தரால் மீட்கப்பட்ட நபரா? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடம் உங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி அவரிடத்தில்  மீட்பைப் பெற்றுக்கொண்ட அனுபவம் உண்டா? கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை மீட்கும்படியாகவே உலகத்தில் வந்தார். அவருடைய மீட்புக்கு பாத்திரவான்களாக நம்முடைய வாழ்க்கைக் காணப்படுகிறதா? அப்படியான மக்கள் ஆனந்தக் களிப்புடன் சீயோனுக்குத் திரும்பி வருவார்கள். அதாவது அவர்கள் எல்லாவிதமான சூழ்நிலையிலும் சந்தோஷத்துடன் நித்திய ராஜ்ஜியத்தை நோக்கிப் பயணிப்பார்கள். அவர்களுக்கு நித்திய மகிழ்ச்சி கொடுக்கப்படும். இந்த உலகத்தின் மகிழ்ச்சி மிகக் குறுகியக் காலம்தான். அது பனிபோல் சீக்கிரத்தில் உலர்ந்துபோம். ஆனால் நித்திய மகிழ்ச்சி என்பது தேவனுடைய ஈவு. அது அளவிடப்பட முடியாதது. அவர்களுடைய வாழ்க்கையில் சஞ்சலமும் தவிப்பும் காணப்படாது.

      நம்முடைய வாழ்க்கையில் அநேகம் முறை சூழ்நிலைகளைப் பார்த்து சஞ்சலமும் வருத்தமும் அடைகிறோம். சிறிதும் விசுவாசமற்றுக் காணப்படுகிறோம். இது உலகப்பிரகாரமான வாழ்க்கையாகும். இந்த உலக மக்கள் மெய்யான கடவுளை அறியாதவர்களாகப் போலியான வாழ்க்கை வாழுகிறார்கள். ஆவிக்குரிய சிலாக்கியங்கள் அவர்களுக்கு மறைபொருளாய் இருப்பதினால் அவர்கள் வருத்தமும் சஞ்சலமும் நிறைந்தவர்களாகத்தான் காணப்படுவார்கள். ஆனால் கர்த்தரால் மீட்கப்பட்ட ஜனங்கள் ஆனந்த சந்தோஷத்துடன் சீயோனை நோக்கி ஆனந்தமாகச் செல்லுவார்கள். இந்த உலகம் அநித்தியமான ஒருவழிப் பயணம் என்பதை அவர்கள் அறிந்தவர்கள். அவர்களின் முடிவு நித்திய சந்தோஷம். நாம் எப்படியான வாழ்க்கைப் பயணத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம்?