“ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபிரெயர் 12:1).

கிறிஸ்தவ வாழ்க்கை என்பதை நாம் ஓடுகிற ஒரு ஓட்டமாக வேதம் சித்தரிக்கின்றது. இந்த ஓட்டத்தில் நாம் சில வேளைகளில் நன்றாக ஓடலாம் சில வேளைகளில் போராட்டங்கள் எதிர் பாராத திருப்பங்கள் பிரச்சனைகளைச் சந்திக்கும்பொழுது, நாம் சோர்ந்து போக வாய்ப்புண்டு. ஆனால் இந்த ஓட்டத்தில் நாம் எவ்விதமாக ஓட வேண்டும் என்று வேதம் நமக்கு போதிக்கின்றது. மெய்தான் இந்த உலகத்தினாலும் பாவத்தினாலும் நாம் பலவிதங்களில் நெருக்கப்படுகிறோம். ஆனால் இவைகள் மத்தியில் நம்முடைய கண்களை கிறிஸ்துவின் மேல் வைக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. விசுவாசத்தைத் துவக்குகிறவரும் அவரே முடிக்கிறவரும் அவரே. நம்முடைய வாழ்க்கையில் நம் சூழ்நிலைகளையும் நம்மையும் பார்த்துச் சோர்ந்துவிட ஏதுவுண்டு. ஆனால் நாம் எப்போதும் கிறிஸ்துவையே நோக்கிப் பார்ப்போம். திரியேக தேவனாய் நம்முடைய வாழ்க்கையில் அனைத்தையும் திட்டமிட்டு இம்மட்டும் வழிநடத்தினவர் நிச்சயமாகத் தொடர்ந்து வழிநடத்துகிறவராக இருக்கிறார். சங்கீதக்காரன் சொல்லுகிறார், “எனக்காக யாவற்றையும் செய்து முடிக்கிற என் தேவனாகிய கர்த்தர்” என்று. இன்னுமாக வேதம் சொல்லுகின்றது “நமக்கு நியமித்திருக்கிற ஓட்டம்.” இந்த வாழ்க்கையின் ஓட்டத்தை தேவனே நமக்கு வைத்திருக்கின்றார். நம்முடைய வாழ்க்கையின் போராட்டங்கள் சோதனைகள் இவை எல்லாவற்றையும் தேவன் நியமித்திருக்கிறார். அவருடைய அனுமதியில்லாமல் திட்டமில்லாமல் இவைகள் நமக்கு நேரிடுவதில்லை. இவைகள் நம்மை அழிக்கவல்ல ஆனால் நம் விசுவாசத்தை உறுதிபடுத்தும்படியாகவே. “நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்” (மீகா 7:7). இந்த விசுவாச ஓட்டம் என்பது நம்முடைய ஞானத்தினாலும் அறிவினாலும் ஓடுகிற ஓட்டம் அல்ல. தேவனுடைய வல்லமையையும் அவருடைய கிருபையும் சார்ந்து ஓடுகிற ஓட்டம். நமக்கு நியமித்திருக்கின்ற ஓட்டத்தில் நாம் பொறுமையோடு ஓடுவோம்.