கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 6                       தள்ளாடவொட்டார்             சங்கீதம் 55 : 1 – 23

நீதிமானை  ஒருபோதும்  தள்ளாடவொட்டார்‘  (சங்கீதம் 55 : 22)

    இந்த சங்கீதத்தில் தாவீது, தன்னுடைய வாழ்க்கையில் ஏமாற்றங்களையும், அதே சமயத்தில் தேவன் பேரில் வைத்திருக்கும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார். மனித வாழ்கையென்பது அநேக ஏமாற்றங்களை சந்திக்கவேண்டிய வாழ்க்கையாக இருக்கிறது. எதிர்ப்புகள் நடைபெறுவதில்லை. அதிகமாய் நம்பினவர்கள் கைவிட்டுவிடுகிறார்கள். காலங்களினால், சூழ்நிலைகளினால் ஏமாற்றம். அநேக சமயங்களில் நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கிறது. அநேகர் இவ்விதமான வேளைகளில் அதிகம் தளர்ந்துவிடுகிறார்கள், சோர்ந்துபோகிறார்கள். தேவனை அறியாத மக்கள் தற்கொலைகளையும் செய்துகொள்ளுகிறதை நாம் செய்தித்தாள்களில் வாசிக்கிறோம்.

   ஆனால் மெய்யான ஒரு விசுவாசி இதன் மத்தியில் வெற்றியுடன் கடந்துப்போக முடிகிறது. அதன் இரகசியம் என்ன? தான் விசுவாசிக்கிரவர் இன்னார் என்று அறிந்திருக்கிறான். தன்னுடைய ஏமாற்றங்களின் வேளையிலும் உதவிக்காக தன் தேவனை அழைக்கும்பொழுது நிச்சயமாக அவர் விடுவிப்பார் என்பதை அறிந்திருக்கிறான். நானோ தேவனை நோக்கி கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்‘ (சங்கீதம் 55 : 16)

    உன் வாழ்க்கையில் தேவனை இவ்விதம் விசுவாசிக்கிறாயா? நீ ஒவ்வொரு நாளும் உன் விசுவாசத்தின் அளவைக் கணக்கிட்டுப்பார். அநேக சமயங்களில் உன் விசுவாசம் எந்த அளவு இருக்கிறது என்று அறி. உன் விசுவாசம் குறைவாயிருக்கிறது என்று அறிவாயானால் அதைக் குறித்து விசனப்படு, அது நல்லது. அது உனக்கு நன்மையாக இருக்கும். சங்கீதக்காரன் இங்கு ‘நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்’ என்று சொல்லுகிறார். ‘ஒரு போதும்’ என்று உறுதிப்படக் கூறுகிறார். அதாவது எந்த சூழ்நிலையிலும் நீதிமானைத் தள்ளாடவொட்டார். வானம் பூமியும் மாறிப்போகலாம் அவர் வார்த்தை மாறாது.