ஜூலை 5               

“நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமானங்களை கற்றுக்கொள்ளுகிறேன்” (சங் 119:71).

      தாவீது மாத்திரமல்ல, ஒவ்வொரு உண்மையான விசுவாசியும் இந்த வசனம் உண்மை என்பதை மனப்பூர்வமாக அறிக்கையிடக்கூடும். ஒரு விசுவாசி, தன்னுடைய வாழ்க்கையில் உபத்திரவங்களிலும் அவன் தேவனுடைய கரத்தை அதில் பார்ப்பான். தேவன் அறியாமல் அவைகள் எனக்கு நேரிடுவதில்லை, என் ஆண்டவரால், இவைகள் என்னுடைய ஆத்தும நன்மைக்காக அனுமதிக்கப்படுகிறவைகள் என்று தெளிவாய் அறிந்திருப்பான். அவைகளைக் கடந்துச் செல்ல அவனுக்கு பெலன் கொடுக்கிறவர் ஒருவர் இருக்கிறார் என்பதையும் அவன் அறிவான். ஆகவே இவ்விதமான உபத்திரவங்கள் அவன் இன்னுமாய் தேவனிடத்தில் நெருங்கி வர அவனுக்கு உதவியாயிருக்கின்றன. அவன் “நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்” (சங் 119:69). என்று சொல்லுகிறவனாயிருப்பான். கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை. அதில் ஒவ்வொரு சிறிய காரியத்திற்கும் அர்த்தம் உண்டு.

      “அதிசீக்கிரத்தில் நீங்கும் லேசான நம்முடைய உபத்திரவம் நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது” (2கொரி 4:17). பவுல் உபத்திரவத்தை எப்படி நோக்குகிறார் பாருங்கள். அவைகளுக்கு ஈடாக, நித்திய கனத்துக்குரிய மேன்மையான காரியங்கள் கொடுக்கப்படும் என்கிறார். உபத்திரவங்களைக் கடந்து செல்வதில் நம்முடைய மனப்பான்மை முக்கியம். ஆனால் சரியான மனப்பான்மை நம்மில் எவ்விதம் உண்டாகும்? தேவனை அறிந்துக்கொள்வதில், தேவனுடைய வார்த்தையை தெளிவாய் அறிந்திருப்பதில் நமக்கு உண்டாகிறது. பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு, நீதியாகிய சமாதான பலனை தரும். அவைகளின் மத்தியிலும் சமாதானம் ஆளுகை செய்யும். அப்படியானால் உன் வாழ்க்கையின் சம்பவங்கள் ஒவ்வொன்றும், ஒரு ஆவிக்குரிய பாடத்தைக் கற்றுக் கொள்ள உனக்கு பெரிதான உதவியாயிருக்கும். உபத்திரவங்கள் உன் வாழ்க்கையில் வீணல்ல. ஆகவே உபத்திரவ வேளைகளில் சோர்ந்து போகாமல் விசுவாசமாயிரு.