கிருபை சத்திய தின தியானம்

நவம்பர் 15                  நாவு           யாக் 1:19-26

உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல்,

தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால்

அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும். (யாக்கோபு 1:26)

 

    நாவைக் குறித்து வேதம் அதிகம் போதிக்கிறது. ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதனில் காணப்படும் அநேக மாறுதல்களில் முக்கியமான மாறுதல் அவன் நாவில்தான் பார்க்கமுடியும். இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக அவன் நாவு பேசினதற்கும்,  தேவனை அறிந்து இரட்சிக்கப்பட்டபின் பேசுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் காணப்படும். இல்லையேல் அவனுடைய இரட்சிப்பு ஒரு பெரிய கேள்விகுறி. அவனைப் பற்றி வேதம் சொல்வது, அவன் மெய்யாலும் இரட்சிக்கப்படவில்லை, அவனாகவே தன்னை தேவபக்தியுள்ளவன் என்று எண்ணிக்கொண்டு தன் இருதயத்தை வஞ்சித்துக்  கொண்டிருக்கிறான்.   சகோதரனே! சகோதரியே!   இந்த தேவனுடைய வெளிச்சத்தில் உன்னை ஆராய்ந்துப்பார். இது மிக அவசியமானது.

     இரட்சிக்கப்படாத மனிதனின் நாவைப் பற்றி என்ன சொல்லுகிறது? உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைபோல் இருக்கிறது (சங் 52:2). இதை கபடமுள்ள நாவு என்றும் அதே சங்கீதத்தில் சொல்லுகிறது. ஆம்! இன்றைக்கு அநேகருடைய நாவு மற்றவர்களைக் காயப்படுத்துகிற சவரகன் கத்திதான். அது மற்றவர்களை துன்பப்படுத்தும். அவர்கள் வார்த்தைகளினால் மற்றவர்களை வெட்டுவார்கள். ஒரு கிறிஸ்தவனின் நாவு அப்படி இருக்கக்கூடாது. அப்படியான நாவு உன்னில் இருக்குமானால் நீ ஒரு கிறிஸ்தவன்  அல்ல.

    ஒரு கிறிஸ்தவனின் நாவு எப்படிப்பட்டது? என் நாவு உமது நீதியையும், நாள் முழுதும் உமது துதியையும் சொல்லிக் கொண்டிருக்கும் (சங் 35:28) என் நாவு உம்முடைய நீதிக்யை கெம்பீரமாய்ப் பாடும் (சங் 51:14) நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும் (சங் 37:30) உன் நாவு நீதிமானின் நாவா? அப்படியானால் உன் நாவு, கர்த்தர் உனக்குச் செய்த எண்ணிமுடியாத நன்மைகளை நினைவு கூர்ந்து துதிக்கும். கர்த்தாவே என் நாவை அவ்விதமாக ஆசீர்வதியும் என்று ஜெபி. தேவன் அவ்விதமாய் செய்வார்.