“அப்பொழுது தானியேல்: ராஜாவே நீர் என்றும் வாழ்க.  சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்” (தானியேல் 6:21-22).

தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. தேவன் தம்முடைய தூதனை அனுப்பி சிங்கத்தின் வாயை கட்டிப் போட்டார். உங்களுடைய வாழ்க்கையில் சிங்கம் போன்ற பிரச்சனைகளையும், போராட்டங்களையும், நெருக்கங்களையும் தேவன் ஆளுகிறவராக இருக்கிறார். ஆகவே நீங்கள் சூழ்நிலைகளைக் கண்டு பயப்படாதேயுங்கள். உங்கள் பட்சத்தில் கர்த்தர் இருக்கிறார் என்ற உறுதி உங்களில் இருப்பது அவசியம். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் ஆண்டவருக்கு பிரியமானவைகளைச் செய்ய ஒப்புக்கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் பாவத்தோடு அல்லது பாவத்தை நேசித்து  வாழுகிற வாழ்க்கை இருக்குமானால், கர்த்தர் உங்கள் பட்சத்தில் செயல்படுவார் என்று எதிர்பார்ப்பது வீண். அநேக கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஆண்டவருக்கு உண்மையாலும் கீழ்ப்படிந்து வாழுகிற வாழ்க்கையைக் கொண்டிருக்க விரும்புவதில்லை. ஆனால் தேவன் தங்களுடைய வாழ்க்கையில் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆண்டவர் அநேக வேளைகளில் உதவி செய்யாத போது அவர்கள் சோர்ந்துவிடுகிறார்கள். அவர்களை சுற்றி இருக்கிற மக்கள் முன்பாக சாட்சியற்று  காணப்படுகிறார்கள். இன்று அநேக சபைகளில் மக்களை சரியான  சத்தியத்தில் வழிநடத்த தவறுகிறார்கள். பாவத்தைக் குறித்து உணர்த்தி சத்தியத்தை தெளிவாய் போதித்து, மக்களை ஆவிக்குரிய வாழ்க்கையில் கட்டக்கூடிய பிரசங்கங்களை செய்வதில்லை. அதனால் மக்கள் பரிசுத்தமான வாழ்க்கை வாழுவதில்லை. பாவத்தைக் குறித்த ஆழமான உணர்வு அவர்களில் இருப்பதில்லை. அநேகர் தங்கள் வாழ்க்கையில் தாங்கள் ஒரு பாவி என்று உணர்ந்து, ஆண்டவரைத் தேடி வந்ததில்லை. சபைகளுக்கு அவர்கள் போகும்பொழுதே, அவர்களை விசுவாசிகள் என்று சொல்லி, அவர்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் மெய்க் கிறிஸ்தவர்கள் அல்ல. அவர்கள் பிரச்சனைகளை சந்திக்கும் போது நிச்சயம் சோர்ந்து போவார்கள் என்பதில் சந்தேகமில்லை.உங்கள் விசுவாசத்தை ஆராய்ந்து பாருங்கள்.