“எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்” (சங்கீதம் 121:1).

நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்பொழுதும் பின்பற்ற வேண்டிய அழகான வழிமுறை இதுவல்லவா! நமக்கு எங்கிருந்து ஒத்தாசை வரும்? கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்துமல்ல, அல்லது மற்ற மனிதர்களிடத்திலிருந்தும் அல்ல. பரத்திலிருந்தும் வரும்படியான ஒத்தாசை அது. உனக்கு ஒத்தாசை கொடுக்கக்கூடிய பர்வதம் யார்? தேவன் மாத்திரமே. அவர் கொடுப்பார் என்றால் அது நிலையானது. 2ஆம் வசனத்தில் “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.”  சங்கீதக்காரனின் நம்பிக்கையை இங்குப் பார்க்கிறோம். அநேக வேளைகளில் நம்முடைய வாழ்க்கையில் சோர்வுகள் ஏன்? மனிதர்களை நாம் நோக்கிப் பார்ப்பதினாலே. மனிதர்களைச் சார்ந்து வாழ பார்க்கின்றோம். அருமையானவர்களே எந்தச் சூழ்நிலையிலும் மனிதன் ஒரு கருவி மாத்திரமே. ஆனால் ஆசீர்வாதம் கர்த்தரிடத்தில் இருந்து மாத்திரமே வருகிறது. ஒருவேளை நீங்கள் உங்களை வாழ்க்கையில் கீழே தள்ளப்பட்டு விடுவேனோ என்று எண்ணலாம். ஆனால் நிச்சயமாக அவர் உன்னை தள்ளாடவொட்டார். உன்னை காக்கிறவர் உறங்கார். உங்களுடைய வாழ்க்கையில் ஏற்ற வேளையில் தம்முடைய ஒத்தாசையை அனுப்பி வழிநடத்துவார் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டாம். சாத்தான் அநேக வேளைகளில் நம்முடைய வாழ்க்கையில் சந்தேகங்களையும் அவிசுவாசங்களையும் ஏற்படுத்துவான். ஆனால் அவனுக்கு செவிக்கொடுக்காதே. நீ விசுவாசிக்கிற தேவன் இன்னார் என்று நீ அறிந்திருக்கவில்லையா? பவுலும் தன்னுடைய வாழ்க்கையில் அநேக சோதனைகள் வழியாய் கடந்துபோனார். ஆனால் தான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்பதை அறிந்திருந்தார். உங்களுடைய வாழ்க்கையில் அவரோடு கொண்டிருக்கும் தொடர்பில் புதுபித்துக்கொள்ளுங்கள். அவருக்கு உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுங்கள். உங்கள் வாழ்க்கையை அழகாக தேவன் வழிநடத்துவார்.