“அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார்” (சகரியா 1:13).

இஸ்ரவேல் மக்கள் 70 ஆண்டுகளாக அடிமைப்பட்டு பாபிலோன் தேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். 12ஆம் வசனத்தில் ‘அப்பொழுது கர்த்தருடைய தூதன் மறுமொழியாக: சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல.’ இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்து, தேவனுடைய தீர்க்கதரிசிகள் அவர்களை எச்சரித்தும் அவர்கள் கீழ்ப்படியாமல் போனார்கள். 70 வருடம் அந்நிய தேசத்தில் அந்நியர்களாக வாழ்ந்தார்கள். அருமையானவர்களே நம்முடைய வாழ்க்கையில் நம் பாவங்களினால் பாடுகள் நெருக்கங்கள் வழியாய் நாம் கடந்துபோக ஆண்டவர் அனுமதித்திருக்கலாம். ஆனால் எப்பொழுதும் அவர் நம்மேல் கோபமாக இருப்பார் என்று என்ன வேண்டிய அவசியமில்லை. நாம் நம்முடைய பாவங்களுக்காக மனம் வருந்துவோம். ஏனென்றால் பாவம் ஆண்டவரை துக்கப்படுத்துகிறது. அதுமாத்திரமல்ல நம்மை அதிகமான வேதனைக்குள்ளாக மாற்றுகிறது. பாவம் என்பது ஒரு கல்லைப் போல இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் அதைக் கொண்டு நம்மை நாமே காயப்படுத்திக்கொள்ளுகிறோம். ஆனால் ஆண்டவரிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் நீடிய பொறுமையும் உண்டு. நாம் நம்முடைய வாழ்க்கையில் வேதனைகள் கஷ்டங்கள் மத்தியில் அவருடைய கிருபைக்காக கெஞ்சும்பொழுது அவர் எப்பொழுதும் கோபம் கொண்டிருக்கிறவராக இருக்க மாட்டார். இந்த தூதனுக்குச் சொன்னதுப் போல ஆறுதலான  வார்த்தைகளையும் நமக்கும் சொல்லுவார். நம்முடைய இருதயம் நிச்சயமாக அதினால் ஆறுதலும் சமாதானமும் அடையும். தேவனைத் தவிர நமக்கு வேறே எங்கே அடைக்கலம் உண்டு?