“ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.” (லூக்கா 21:36)

இயேசு கிறிஸ்து தம்முடைய வருகையை குறித்து இங்கு பேசுகிறார். இரண்டாம் வருகையானது மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின் மேல் மனுஷகுமாரன் வருவதாக இருக்கும். இன்றைய சூழ்நிலைகளை நாம் பார்க்கும் பொழுது வேதம் சொல்லுகிறது எவ்வளவு துல்லியமாக இருக்கிறது. இந்தக் கடைசி நாட்களில் கொள்ளை நோய்களும், பட்டினிகளும், பல இடங்களில் பூமி அதிர்ச்சி போன்ற அடையாளங்கள் அதிகமாய் நிகழ்கிறதைப் பார்க்கிறோம். உதாரணமாக இந்த ஆண்டில் எடுத்துக் கொள்வீர்களானால், அனேக இடங்களில் பூமி அதிர்ச்சிகள் மற்றும் மேலும் நாம் சந்திக்கிற கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் போன்றவற்றை நாம் ஒரு நாளும் எண்ணியது கிடையாது. இவ்விதமான ஒரு காலத்தை நாம் சிந்தித்தது கூட கிடையாது. எவ்வளவோ விஞ்ஞான ரீதியான முன்னேற்றங்கள் இருந்தாலும் இந்த ஒரு சாதாரணமான கொரோனா வைரஸ்க்கு முன்பாக உலகமே தடுமாறிக் கொண்டிருக்கிறது.  ஆண்டவர் சொல்லுகிறார் இவைகளுக்கு எல்லாம் நீங்கள் தப்பி, அதாவது தேவனுடைய வருகைக்கு முன்பாக நாம் பிழைத்திருக்கும் படி பாத்திரவன்களாக எண்ணப்படுவதற்கு ஜெபம்பண்ணி விழித்திருங்கள். நம் வாழ்க்கையில் ஜெபத்தோடு கூடிய விழிப்பு தேவை. எல்லாவற்றையும் தேவனுடைய கரத்தில் ஒப்புவித்து நமக்கு நியமித்திருக்கிற பாதையில் செல்ல வேண்டியது அவசியம். ஆகவே நாம் ஜெபத்தோடு விழித்திருப்போம். கர்த்தரை நோக்கிப் பாருங்கள். அவரையே நம் நம்பிக்கையாக கொண்டிருப்போம்.