“தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம்” (எபேசியர் 1:12).

 தேவன் சகலத்தையும் ஆளுகை செய்கிறார் என்பதை நாம் அநேக வேளைகளில் மறந்துவிடுகிறோம். அவருடைய சர்வ ஏகாதிபத்தியத்தை நாம் அடிக்கடி நினைவுகூருவதில்லை. அநேகர் தேவனுடைய சர்வ ஏகாதிபத்தியத்தை ஏற்றுக்கொள்வதும் இல்லை. ஆனால் வேதம் இந்தச் சத்தியத்தை தெளிவாய்ப் போதிக்கிறதை நாம் அறிந்திருக்கிறோம். தேவன் தம்முடைய நித்தியத் திட்டத்தின்படியாக எல்லாவற்றையுமே நடப்பிக்கிறார். அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், நாம் புரிந்த கொள்ளக் கூடாதக் காரியங்களானாலும், நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும் எல்லாவற்றையும் அவர் தம்முடைய தீர்மானத்தின்படி நடப்பிக்கிறார். அநேக வேளைகளில் நம்முடைய வாழ்க்கையில் போராட்டங்கள் சோதனைகள் ஏற்படும்போது ஏன் என்று நம் இருதயத்தில் கேட்கிறோம். ஆனால் இவைகளின் மத்தியிலும் தேவன் தம்முடைய ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிறார். அவருடைய சர்வ ஏகாதிபத்தியத்தை இதில் விளங்கப்பண்ணுகிறார். மேலும் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைகேதுவாக நடைபெறுகிறது என்று வேதம் சொல்லுகிறது. தேவனிடத்தில் நாம் அன்புகூரும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் சகலமும் நன்மைகேதுவாக நடக்கின்றது என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.