கிருபை சத்திய தின தியானம் 

ஆகஸ்ட் 18              ஏற்ற வேளையிலே          சங்கீதம் 145:1-21

“எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது;

ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்” (சங் 145:15)

      கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் ஏற்றவேளை என்பதை நியமித்திருக்கிறார். அநேக சமயங்களில் நம்முடைய வாழ்க்கையில் நாம் விரும்புகிற வேளையில், விரும்புகிற வண்ணமாக விடுதலையை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் கர்த்தர் நமக்கென்று நியமித்திருக்கிற ஏற்ற வேளையை குறித்து நாம் எண்ணுவதுமில்லை, அநேக சமயங்களில் எதிர்பார்ப்பதுமில்லை.  ஆனால் வேதம் தெளிவாக சொல்லுகிறது ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு(பிரசங்கி 3). உன்னுடைய வாழ்க்கையில் நீ கடந்து போகிற பல இக்கட்டான சூழ்நிலைகளில் உன் விடுதலை தாமதிக்கப்படுமானால், கர்த்தருடைய ஏற்ற வேளைக்கு காத்திரு. கர்த்தர் உன் விடுதலையை ஏற்ற நேரத்தில் கட்டளையிடுகிறவராக இருக்கிறார். ஆகவே நாம் தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து அவருடைய நேரத்திற்காக காத்திருப்பது நல்லது.

     சங்கீதம் 104:7 -வது வசனத்திலும் “ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்” என்று சொல்லப்படுகிறது. இந்த பகுதியில் திமிங்கலமும் அவரை நோக்கிக் காத்திருக்கும், அவைகளுக்கு ஆகாரத்தை கட்டளையிடுகிறார். இவைகளைக் காட்டிலும் விலையேறப்பெற்ற உன்னையும், உன் வாழ்க்கையையும் தேவன் ஏற்ற வேளையில் ஏற்ற காரியத்தை அவர் செம்மையாக செய்வார் என்பதை நீ உணர்ந்து காத்திரு.

     அநேக சமயங்களில் நாம் சூழ்நிலைகளைப் பார்த்து, நம்முடைய ஞானத்தைக் கொண்டு செயல்படுகிறோம். கர்த்தருக்காக பொறுமையாக காத்திருப்பதுமில்லை, ஆனால் அதின் முடிவு தோல்வியே. ஆனால் வேதம் சொல்லுகிறது கர்த்தருக்காக நாம் பொறுமையோடே காத்திருக்க வேண்டும். அப்பொழுது நிச்சயமாக உன் காரியத்தை ஏற்ற வேளையில், சரியான விதத்தில் செய்வது மாத்திரமல்ல, செம்மையாய் அதை செய்து முடிப்பார். சங்கீதக்காரன் சொல்லுகிற வண்ணம் “கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” என்ற நம்பிக்கையின் ஊற்றை சுதந்தரித்துக் கொள். பொறுமையோடே காத்திரு. கர்த்தர் உன்மேல் நினைவாய் இருக்கிறார் (சங்கீதம் 40:17).