ஜனவரி 1             தமக்கென்று ஒரு கூட்ட மக்கள்          ஏசாயா 43:1-28

“இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்;
இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்” (ஏசாயா 43:21).

      தேவன் இந்த உலகத்தில் தமக்கென்று ஒரு கூட்ட மக்களை ஏற்படுத்தி அவருடைய நாமத்தின் மகிமைக்கென்று  வைத்துள்ளார். கர்த்தருடைய ஜனங்கள் மற்ற எல்லாரைக்காட்டிலும் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தேவனுடைய நாமத்தின் மகிமையை, அவருடைய புகழ்ச்சியை இந்த உலகத்திற்கு பிரஸ்தாபம் பண்ணுகிறவர்கள். தேவனுடைய பிள்ளைகள் அவருடைய விருப்பத்தையும் சித்தத்தையும் அறிந்து அதன்படி செய்கிறவர்களாகக் காணப்படுவார்கள். மேலும் கர்த்தருடைய பிள்ளைகளைக் குறித்து வேதம்:  “பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்” என்று சொல்லுகிறது.

      இந்த உலகத்தில் தேவனுக்கு பயந்து அவருடைய வழியின் படி நடக்கிற ஜனங்கள் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். அவர்கள் தேவனை நோக்கிக் கூப்பிடும்பொழுது தேவன் அவர்களுக்கு செவிகொடுக்கிறவராக இருக்கிறார். தேவன் அவர்கள் மூலமாக தம்முடைய மேலான திட்டத்தை நிறைவேற்றுகிறவராக இருக்கிறார். மேலும் அவர்களைக் குறித்துப் பவுல்: “பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்” (எபேசியர் 1:5) என்று சொல்லுகிறார். ஆம்!அவர்கள் கிருபையின் மேன்மைக்கு பாத்திரவான்களாக நடந்து கொள்பவர்கள். அந்த ஜனங்களை தேவன் முன் குறித்திருக்கிறார். அவர்கள் தேவனுடைய துதியைச் சொல்லி வருவார்கள்.