ஆகஸ்ட்  24                   

“குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப் பட்டிருகிறது;  முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது;   அது  தாமதித்தாலும் அதற்குக் காத்திரு, அது நிச்சயமாய் வரும்,அது தாமதிப்பதில்லை”(ஆபகூக் 2:3)

     தேவனுடைய காலமே நமக்கு சிறந்த காலம். தேவன் தம்முடைய திட்டத்தை நிறைவேற்ற சரியான நேரத்தை வைத்திருக்கிறார். அது அவருடைய உன்னதமான சர்வ ஞானத்தோடே திட்டமிடப்பட்டது. அநேக சமயங்களில் நாம், காரியம் நிறைவேறவில்லையென்று அங்கலாய்க்கிறோம். ஆனால் தேவன் வைத்திருக்கிற வேளைக்காகப் பொறுமையுடன் காத்திருப்பது நல்லது. அவசரப்படுவதால் நாம் பெறும் காரியம் சிறந்ததாக இல்லாமல் போகலாம். ஆகவே எப்போதும் தேவனுடைய வேளைக்காகக் காத்திருப்பது நல்லது. அந்த நேரத்தில் தேவன் தம்முடைய கிருபையை மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் செயல்படுவதைப் பார்த்து நாம் துதிப்போம்.

     அநேக வேளைகளில் நாம் எதிர்ப்பார்த்த காரியம், எதிர்பார்க்கும் நேரத்தில் நடைபெறவில்லையென்றால், நாம் உடனே தேவனுடைய வார்த்தையை சந்தேகிக்கிறோம். ஆபிரகாமின் மனைவி சாராள்,  உன் சந்ததி விளங்கும் என்று சொன்ன வாக்குத்தத்தம் நிறைவேற காலதாமதமானபோது சந்தேகம் கொள்ள ஆரம்பித்தாள். ஆகார் மூலம் குழந்தை பெற திட்டமிட்டு, ஆகாரை ஆபிரகாமுக்குக் கொடுத்தாள். அதின் விளைவு என்ன ஆயிற்று? அவளோ ஆகாரினால் உதாசீனப்படுத்தப்பட்டாள். இஸ்மவேல் அவளுடைய சொந்தக் குமாரனாகிய ஈசாக்குக்கு இடையூறு விளைவிக்கிறவனாக ஆனான்.

     அன்பானவர்களே! தேவனுடைய வார்த்தையை, வாக்குத்தத்தத்தை சந்தேகிக்காதீர்கள். அது பொய்யல்ல. தாமதித்தாலும் அதற்குக் காத்திரு, அது நிச்சயம் வரும். அது தாமதிப்பதில்லை. அது தேவனின் மிகச்சிறந்த  அமைப்பில், ஏற்றவேளையில் நிறைவாய்ச் செய்யப்படும். நீ அப்போது காத்திருந்தது வீண் அல்ல என்று சொல்லுவாய். உன் எதிர்பார்ப்பு வீணாய் போகவில்லை என்று அறியும்போது உன்னுடைய மகிழ்ச்சி இரட்டிப்பானதாய் இருக்கும்.