கிருபை சத்திய தின தியானம்
செப்டம்பர்: 20 ஆசீர்வாதமாயிருப்பாய் ஆதியாகமம் 12:1-8
‘நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்’ (ஆதி 12:2)
இது ஆபிரகாமிற்கு மத்திரமல்ல ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் வைத்திருக்கும் உன்னத வாக்குத்தத்தம். இன்றைக்கு ‘ஆசீர்வாதத்தை’ பற்றி ஒரு சாரான எண்ணம் மாத்திரம் அநேகரில் இருக்கிறது. அது என்ன? ஆசீர்வாதம் என்றால் உலகப்பிரகாரமான அநேக நன்மைகள் அவ்வளவுதான். ஆனால் வேதம் அதைக்காட்டிலும் மேலான ஆசீவாதத்தைப்பற்றியும் கூறுகிறது என்பதை உணருவதில்லை. அது என்ன? ஆவிக்குரிய ‘ஆசீர்வாதங்கள்’. அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். (எபேசியர் 1:3)
உலகத்துக்குரிய ஆசீர்வாதங்கள் இவ்வுலகத்தோடே கடந்துபோகிறவைகள். ஒருவேளை அது உன்னை பெருமையடையச் செய்யக்கூடும். அநேக சமயங்களில் அவைகளின் பேரில் உன் நம்பிக்கையை வைக்கவும் அது உன்னை வழிநடத்திவிடும். சிருஷ்டிகரை தொழுதுகொள்ளாமல் சிருஷ்டியைத் தொழுது கொள்ளுகிறவர்களைப் போல , ஆசீர்வதித்த தேவனையல்ல உலக ஆசீர்வாதத்தை மாத்திரம் மேன்மைபாராட்டச் செய்யும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் இன்றைக்கு இந்த விதமான ஆசீர்வதங்களைக்குறித்து பிரசங்கிக்கிற போதகர்களும், அவைகளையே அதிகமாய் விரும்புகிற கிறிஸ்தவர்களும் மலிந்துவிட்டார்கள். இது வேதனையான காரியம்.
ஆனால் நீ எப்போது மெய்யாலும் ஆசீர்வாதமாயிருப்பாய்? ஆம்! ஆவிக்குரிய ஆசீவாதங்களை நீ பெற்றிருக்கும்போதுதான், நீ உன் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் அயலகத்தாருக்கும் சொல்லப்போனால் உலகத்திற்கும் ஆசீர்வாதமாயிருப்பாய். உன்னுடைய சாட்சியான வாழ்க்கை மற்றவர்களை கிறிஸ்துவண்டை வழி நடத்தும், மற்ற விசுவாசிகளுக்கு சவாலாய் இருக்கும், உற்சாகப்படுத்தும். நீ இவ்விதமான ஆசீர்வாதங்களுக்காக வாஞ்சி, ஜெபி. பவுல் இவ்விதம் சொல்லுகிறார், ‘நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன். (ரோமர் 15:29)