“இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்” (உன்னதப்பாட்டு 2:8).
ஒவ்வொரு நாளும் என் நேசர் என்னோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறார். ஆம், இந்த வேத புத்தகம் என் நேசரின் சத்தத்தைக் கொண்டதாக இருக்கிறது. என்னை நேசிக்கிற ஒருவர் இந்த உலகத்தில் உண்டு என்று சொன்னால், அவர் என்னுடைய தேவன். இந்த உலகத்தில் என்னை மற்றவர்கள் நேசிக்க முடியாது. ஏனென்றால் என்னுடைய பாவம், பாவத் தன்மையினால் மற்றவர்கள் என்னை நேசிக்க முடிவதில்லை. என்னைக் குறித்து மற்றவர்கள் அறிந்திருப்பது மிகக் கொஞ்சம். ஆனால் எல்லாவற்றையும் அறிந்திருக்கிற என் நேசர், என்னில் அன்புகூர்ந்ததின் நிமித்தமாக தம்முடைய வார்த்தையின் சத்தத்தை ஒவ்வொரு நாளும் கேட்கப்பண்ணுகிறார். அவர் என்னுடைய கூப்பிடுதலுக்குச் செவிகொடாமல் இருப்பதில்லை. என் கூப்பிடுதலின் சத்தத்தைக் கேட்டு சீக்கிரமாய் வருகிறார். மேடுகள் போன்ற தடைகள் இருந்தாலும் அவர் வேகமாய் வந்து, என்னுடைய பட்சமாக செயல்படுவார் என்பதில் சந்தேகமில்லை. இந்த நேசரில் என் முழு இருதயத்தோடும் முழு பெலத்தோடும் அன்பு கூருகிறேன். என்னையும் நேசிக்கிற ஒரு தேவன் உண்டு என்று சொன்னால், என்னையும் அவர் நேசிப்பார் என்றால், நிச்சயமாக அது மிகுந்த ஆச்சரியம். என்னைப் போன்ற ஒரு பாவியை நேசித்து, அவர் சிலுவையில் எனக்காகவே தன்னை பலியாக ஒப்புக்கொடுத்திருப்பார் என்றால், இந்த நேசத்தை நான் எங்குக் காண முடியும்? என் வாழ் நாள் முழுவதும் ஆண்டவரே உமது பாதத்தில் என்னை அர்ப்பணிக்கிறேன் என்று சொல்வதைத் தவிர நான் செய்யக் கூடிய மிக சிறந்த காரியம் என்னவாக இருக்க முடியும்? இந்த நேசர் அருமையானவர்.