கிருபை சத்திய தின தியானம்

ஜூலை  13               விடாய்த்த ஆத்துமா              எரேமியா 31 : 10 –25

‘நான் விடாய்த்த ஆத்துமாவை சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்’ (எரேமியா 31 : 25)

    இந்த வசனத்தில் இரண்டு அருமையான பதங்களை பார்க்கிறோம். அவைகள் 1. சம்பூரணமடையபண்ணுவேன் 2. நிரப்புவேன், நமது தேவன் செய்வது எதுவுமே மிகவும் சிறந்ததாயும், குறைவற்றதாயும் இருக்கும் என்பதை நம்புங்கள். மனிதன் செய்வது குறைவுள்ளதாயிருக்கும், நீயும் நானும் செய்யும்படியானது குறைவுள்ளதாக இருக்கலாம். ஆனால் தேவன் செய்வது எதுவுமே நிறைவானதாக இருக்கும் என்பதை எப்போதும் நம்புங்கள்.

     அன்பானவர்களே! வாழ்க்கை ஒவ்வொருநாளும் மிகவும் கடினமானதாக போய்க்கொண்டிருக்கிறது. பலவேளைகளில் இவைகளின் மத்தியில் சிக்கி விடாத்துபோனவர்களாயும், தொய்ந்து போனவர்களாயும் இருக்கிறோம். அநேக எதிர்ப்பார்ப்புகள், தோல்வியில் முடியும்போது அதிகமான சந்தேகங்களும், கலக்கங்களும், பயங்களும் நம்மில் அதிகரிக்கின்றன, செய்வதறியாது தவிக்கிறோம். எப்படி குடும்பத்தை நடத்திச்செல்வது என்று ஒரு தகப்பனுமாய், என் வாழ்க்கையை நான் எப்படி கடந்து செல்வது என்று தடுமாறுகிற மனிதருமாய் இருக்கிறோம். ஆனால் தேவன் சொல்வதைக் கவனியுங்கள்,’ விடாய்த்த ஆத்துமாவை சம்பூரணமடைய பண்ணுவேன்.’ உண்மைதான்! நீ அவைகளை வெற்றியோடு நடத்திச்செல்வது முடியாது, ஆனால் தேவனால் ஆகும். அதை வெறுமையாகத் தீர்க்கிறவராக மாத்திரமல்ல, அதைச் சம்பூரணமாக்குகிறேன் என்று சொல்வதை நம்பு,’ தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்’ என்று சொல்வதை முழு நிச்சயமாய் நம்பு.

     அன்பான சகோதரனே! சகோதரியே! நீ தொய்ந்து போன நிலையில், விடாய்த்த நிலையில் இருக்கிறாயா? தேவனை நோக்கிப்பார். அவருடைய வார்த்தையை, வாக்குத்தத்தத்தை சந்தேகிக்காதே. அப்படியானால் சங்கீதகாரனோடு சேர்ந்து இவ்விதம் சொல்லக்கூடும்.’ நிணத்தையும் கொழுப்பையும் உண்டது போல என் ஆத்துமா திருப்தியாகும், என் வாய் ஆனந்தக் களிப்புள்ள உதடுகளால் உம்மைப்போற்றும்.’ (சங்கீதம் 63 : 5)