“இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்” (ஆகாய் 1:5).
தேவன் நம்முடைய வழிகளைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்று சொல்லுகிறார். ஏன் நம்முடைய வாழ்க்கையில் தேவன் இதைச் சொல்ல வேண்டும்? நம்முடைய வாழ்க்கையின் பல காரியங்கள் நமக்கு விளங்கிக்கொள்ள முடியவதில்லை. அநேக தோல்விகளையும் வருத்தங்களையும் நாம் சந்திக்கும்போது ஏன் என்ற கேள்வியை நாம் எழுப்புகிறோம். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் எதுவுமே நோக்கமில்லாமல் நடைபெறுவதில்லை. ஒரு சிறிய அடைக்கலான் குருவியும் அவருடைய சித்தமில்லாமல் கீழே விழுவதில்லை என்று வேதம் சொல்லுகிறது. “நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்” (ஆகாய் 1:6). ஏன் இவைகள் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுகின்றது? ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையைச் செம்மைபடுத்தும்படியாகவே நம்முடைய வழிகளைச் சிந்திக்கும்படியாகச் சொல்லுகிறார். நாம் நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய ஆசீர்வாதத்தை விரும்புகிறோம். ஆனால் தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுக்க விரும்புவதில்லை. நம் சொந்த வழிகளிலே நடக்க விரும்புகிறோம். கர்த்தருக்கு நம்முடைய வாழ்க்கையை முழுமையாய் ஒப்புக்கொடுக்காமல் தேவனுடைய மெய்யான ஆசீர்வாதத்தை நாம் பார்ப்பது என்பது கூடாத காரியம். ஆனால் இன்றைக்குக் கர்த்தருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். நம்முடைய வாழ்க்கையை அவர் செவ்வைப்படுத்துவார். நம்மையும் நம் குடும்பத்தையும் அவர் அழகாகக் கட்டி, அவருடைய நாமத்தை அதன் மூலமாக மகிமைபடுத்துவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.