ஏப்ரல் 23    

“இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள்” (மத்தேயு 20:34).

நாம் ஆண்டவருடைய குண நலன்களைக் குறித்து அதிகமாய் சிந்திப்பது நமக்கு மிக ஆறுதலாகவும், வாழ்க்கையின் இக்கட்டான வேளைகளில் நமக்கு சமாதானத்தையும் கொடுப்பதாக இருக்கும். இங்கே இரண்டு குருடர்கள் தங்கள் கண்கள் திறக்கப்பட வேண்டும் என்று ஆவலோடு கூப்பிடுகிறார்கள். அப்பொழுது அநேகர் அவர்களை அதட்டுகிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ அவர்கள்மேல் மனதுருகுகிறார். நம்முடைய வாழ்க்கையில் இயேசுவின் மனதுருக்கத்தை சார்ந்து கொள்வோம். நம்முடைய வாழ்க்கையில் நம் உணர்வுகளையும், நம்  பாடுகளையும் அறிந்துகொள்ளக் கூடாத ஒரு சமுதாயத்தின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதன் மத்தியில் ஆண்டவருடைய அன்பும், இரக்கமும் நமக்கு மிகுந்த ஆறுதலை கொடுப்பதாக இருக்கும்.

 “அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி” (மத்தேயு 9:36) என்று பார்க்கிறோம். நாம் அநேக வேளைகளில் ஆண்டவரை அறியாத மக்கள் பேரில் மனது உருக்கம் உள்ளவர்களாக இருப்பது இயேசுகிறிஸ்துவின் குணநலனை  பிரதிபலிக்கிறதாக இருக்கிறது.  நாம் மனதுருக்கம் என்ற ஒரு தன்மையை இயேசுவினிடத்தில் பார்ப்பது மட்டுமல்ல, அதை நம்முடைய வாழ்க்கையில் வளர்த்துக்கொள்வது அவசியம். அது இயேசுவின் சாயலில் நாம் வளர்வதற்குரிய ஒரு நிலையை  வெளிப்படுத்துவதாக இருக்கும். இயேசுகிறிஸ்துவின் மன உருக்கம் நம்முடைய வாழ்க்கையிலும் இருக்க நாம் ஜெபிப்போமாக.

நம்மை சுற்றிலும் இருக்கிற கோடிக்கணக்கான தேவனை அறியாத மக்கள் பேரில் மன ஒழுக்கத்தோடு மன உருக்கத்தோடு இருப்போமானால் அது அவருடைய குணத்தை  நம்மில் வெளிப்படுத்துகிறது. அழிந்துகொண்டிருக்கிற தேவனைத்  தெரியாத மக்களுக்காக நாம் பாரங்கொண்டு அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு சுவிசேஷத்தை அறிவிப்பதிலும் அவர்களுக்காக ஜெபிப்பத்திலும் கருத்துள்ளவர்களாக இருக்கும் பொழுது ஆண்டவருக்கு  நிச்சயமாக அது பிரியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.