ஜனவரி 31

“அன்பிலே பயமில்லை” (1யோவான் 4:18).

இன்றைக்கு மனிதன் பயத்தினால் பீடிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருக்கிறான். எதிர்காலத்தைக் குறித்த பயம் இன்னும் பலவிதமான பயங்கள் மனிதனுடைய வாழ்க்கையை ஆட்கொண்டு அவனை அடிமைபடுத்தி செயல்படுகிறது.  ஆனால் வேதம் அழகாகச் சொல்லுகிறது. மெய்யான தேவனுடைய அன்பு நம்முடைய வாழ்க்கையில் இருக்கும்பொழுது நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இந்த அன்புக்குரியவர் என்னுடைய கரத்தைப் பற்றிக்கொண்டார். அவர் என்னை வழிநடத்துகிறார். என்னை நேசிக்கிறார். என்னில் அன்புகூறுகிறவர் கடைசிமட்டும் முற்றும்முடிய அன்புகூறுகிறவராக இருக்கிறார். அவருடைய கரத்தில் நான் இருக்கும்பொழுது எனக்காக யாவற்றையும் அவர் அழகாகச் செய்து முடிக்கிறவர். நான் ஏன் பயப்பட வேண்டும்? பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆகவே ஒரு மெய் கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் அன்பு ஒரு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது.  1யோவான் 4:18 “பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.” அன்பானவர்களே நம்முடைய வாழ்க்கையில் இன்னும் பயம் நம்மை ஆட்க்கொண்டு இருக்குமானால் இந்த தேவனுடைய அன்பை நாம் அறிய வேண்டிய விதத்தில் இன்னும் அறியவில்லை.  இந்த அன்பை அறியாமல் வாழுவதே இந்த உலகத்தில் ஒரு துயரமான ஒரு வாழ்க்கை. ஆனால் இந்த அன்பில் வாழுவது ஒரு பரலோக வாழ்க்கை. பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். நம்முடைய வாழ்க்கையில் பயம் இன்னும் நம்மை ஆட்கொண்டு நம்மைக் கலங்கடிக்கப் பார்க்கின்றதா? நாம் தேவ அன்பை நோக்கிப் பார்ப்போம். சிலுவையில் தேவன் உன்னதமான அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிறிஸ்து இந்த உலகத்தில் வந்ததினால் அந்த அன்பு வெளிப்பட்டது என்று வேதத்தில் பார்க்கிறோம். கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கும்போது இந்த அன்பை நாம் பார்க்கிறோம். அன்பின் உருவமாகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் நோக்கிப் பார்க்கும்பொழுது தேவன் அன்புள்ளவர் அவர் அன்பாயிருக்கிறார் என்பதைப் பிரதிபலிக்கிறதை நாம் எவ்விதம் மறுக்க முடியும்! தேவ அன்பு நம்முடைய வாழ்க்கையில் இருக்குமானால் பயம் என்பதில்லை. என்ன ஒரு அருமையான வாழ்க்கை! இந்த உலக மக்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம், எவ்வளவாக பயமில்லாத ஒரு வாழ்க்கையின் மூலமாக நாம் நம்மை வெளிப்படுத்துகிறவர்களாக இருக்க கர்த்தர் உதவி செய்கிறார்!