“என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்”( மத் 11:30).

       ஆண்டவராகிய இயேசு என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்று சொல்லுகிறாரே இது உண்மையா? அருமையானவர்களே அநேக சமயங்களில் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது கடினமானது என்று எண்ணுகிறோம். அது தவறு. அதற்கு முந்திய வசனத்தைப் பார்ப்போமேயானால் நான் சாந்தமும், மனத் தாழ்மையுமாய் இருக்கிறேன் என்று சொல்லுகிறார். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். நம்முடைய சொந்த ஞானத்தோடும் அறிவோடும் நம்முடைய வாழ்க்கையை நடத்தப் பிரயாசப்படும் பொழுது வாழ்க்கை என்பது மிகக் கடினமாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

       ஆனால் நாம் முற்றிலுமாக தேவனை சார்ந்துக் கொள்ளும்பொழுது, தேவனே நம்முடைய எல்லாக் காரியங்களையும் அவர் பொறுப்பெடுத்துக் கொள்ளுகிறார். இவ்விதமான வாழ்க்கைக்கு தேவன் நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார்? அவரை முற்றிலுமாக சார்ந்து தாழ்மையாக இருப்பதையே அவர் எதிர்பார்க்கிறார். மீகாவின் புத்தகத்தில் “மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்” என்று வேதம் சொல்லுகிறது. ஆம் நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையில் தேவன் எதிர்பார்க்கும் ஒரே ஒரு நிபந்தனை மனத்தாழ்மை.

       மனத்தாழ்மையோடு நாம் வாழுகிறவர்களாக நாம் இருப்போமேயானால், பிலிப்பியர் 4:13 –ல் சொன்ன வண்ணமாக “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” நாம் சொல்லுவோம். ஆம் நாம் தாழ்மையாய் தேவனை சார்ந்துகொள்ளும்பொழுது நம்முடைய பெலத்தினால் நாம் நடக்கும்படியாக அல்ல, நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்துவின் மூலமாக நம்முடைய வாழ்க்கையில் நாம்  எல்லாவற்றையும் செய்ய தேவன் போதுமானவர். பெலனற்றவர்கள் கிறிஸ்துவின் மூலமாக பெலத்தைப் பெற முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.