“அவர்கள்: எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையது; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்” (சங்கீதம் 12:4).

      இன்றைக்கு பொதுவாக தேவனை அறியாத மக்கள் சொல்லும்படியான வார்த்தைகள் இவ்விதமாகவே காணப்படுகிறது. அவர்களின் நாவுகளில் கட்டுப்பாடில்லை. தேவ பயத்தோடு கூடிய விதத்தில் பேசுவதுமில்லை. எங்கள் உதடுகள் எங்களுடையது என்று தாங்கள் விரும்பிய விதத்தில் பேசக்கூடிய மனநிலையில் வாழுகிற வழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். “அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது! நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!” (யாக்கோபு 3:5-6) என்று நாவைக் குறித்து யாக்கோபு கூறுகிறதை நாம் பார்க்கிறோம். இது உலக மனிதனின் நிலை. ஆனால் ஒரு மெய்யான தேவனுடைய பிள்ளை தங்களுடைய நாவுகளில் தேவனுடைய ஆளுகையைக் கொண்டிருப்பார்கள். நம்முடைய நாவை ஆண்டவர் ஆளுகிறவராக இருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் விரும்பினவைகளைப் பேச முடியாது. நாம் நம்முடைய சொற்களினால் நாம் ஆண்டவருடைய பிள்ளைகளா? இல்லையா? என்பதை வெளிப்படுத்த வேண்டிய மக்கள். அதற்குரிய தெய்வபயம் நம்மில் கொண்டு தேவனைக் கனப்படுத்த வேண்டும். உண்மையான பயபக்தி நம்முடைய வாழ்க்கையில் இருப்பது மிக அவசியம். ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளும் இரட்சிக்கப்பட்ட பின்பு தேவனை மகிமைப்படுத்தவும், சத்தியத்தை அறிவிக்கவும், அவருக்குப் பிரியமானதைப் பேசவும், கட்டுப்பாடுகள் கொண்ட நாவாகக் காணப்பட வேண்டும். இதுவே தேவனுடைய பிள்ளைகளின் மெய்யான இரட்சிப்பின் அடையாளம். இவ்விதமாக இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் நாம் இரட்சிக்கப்பட்டவர்கள் என்பதை எவ்விதம் நிரூபிக்கமுடியும்? நம்முடைய- வாழ்க்கையின் சாட்சியை நிலைப்படுத்துவதின் முக்கியமான ஒ சரீரத்தின் உறுப்பு நாவு. அதைக் கொண்டு நாம் தேவனை மகிமைப்படுத்துவோம் அல்லது அவரை மகிமைபடுத்தாமல் போவோம்.