“உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்” (எபிரேயர் 11:38)

விசுவாச முற்பிதாக்களைக் குறித்து அநேகருடைய வாழ்க்கையை இங்கு மேற்கோள் காட்டுகிறதை வாசிக்கிறோம். தேவனுக்கு என்று அவர்கள் வாழ்ந்த விதத்தையும், அவர்கள் விசுவாசத்தினால் எவ்விதம் ஜெயித்தார்கள், விசுவாசத்தினால் எவ்விதமாக நற்சாட்சி பெற்றார்கள், விசுவாசத்தினால் எவ்விதமாக தேவனுக்கு பிரியமாக வாழ்ந்தார்கள் என்பதைக் குறித்து பார்க்கிறோம். இங்கு சொல்லப்படுகிற ஒரு காரியம் உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை என்பது. அதாவது உலகமானது அவர்களுக்குத் தகுதி இல்லை என்று சொல்லப்படுகிறது. நாம் மெய்யாலுமே உலகத்தை விட்டு பிரிக்கப்பட்ட ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? இன்றைய பல போதனைகள் உலகத்தை மையமாக வைத்து போதிக்கப்படுகிறது. உலகத்தின் நன்மைகளை மையமாக வைத்தே ஆசீர்வாதம் என்று அதற்காக தேவனை நோக்கி பல மணிநேரங்கள் ஜெபிப்பதும் தேவனிடத்தில் மன்றாடுவதும் வழக்கமான ஒரு போலியான உபதேசங்கள் இன்றைக்கு காணப்படுகிறது. ஆனால் வேதத்தில் நற்சாட்சி பெற்ற தேவ மனிதர்களுடைய வாழ்க்கையை நாம் பார்க்கும் போது உலகம் அவர்களுக்கு பாத்திரமாக இருக்க வில்லை. நாம் இந்த உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்கக்கூடாது, நம்முடைய மனது உலகத்தை நாடி ஓடுகிற ஒன்றாக காணப்படுகிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நமக்கு தேவைகள் உண்டு அவசியங்கள் உண்டு. ஆனால் உலகம் நமக்கு மையமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவனுக்குப் பிரியமாக வாழ கற்றுகொள்வோமாக.