ஜூலை 23                 

“ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன்” (1 கொரிந்தியர் 1:19).

      இந்த உலகில் ஞானிகள் புகழப்படுகிறார்கள். இந்த உலகத்தில் புத்திசாலிகள் உயர்வாக எண்ணப்படுகிறார்கள். இவர்களின் மேன்மை உலகமெங்கும் பெருமையாகப் பேசப்படுகிறது. அவர்களைப் பார்க்கிற மக்கள் அவர்களைப்போல தாங்களும், தங்கள் பிள்ளைகளும் ஆகவேண்டும் என்று எண்ணுகிறார்கள். வாழ்ந்தால் இப்படி வாழவேண்டும் என்று எல்லோரும் வாழ்த்துகிறார்கள். இந்த ஞானிகளும், புத்திசாலிகளும், எப்போதும் ஆண்டவராகிய இயேசுவின்மேல் வைக்கும் எளிய விசுவாசத்தை பரியாசம் பண்ணுகிறார்கள். இந்தப் போதனை அற்பமானது என்று எண்ணுகிறார்கள். இது காலத்திற்கு ஏற்காத பழங்கால கதை என்று சொல்லுகிறார்கள்.

      இந்த மக்களை நீயும் நானும் எதிர்க்கவேண்டிய அவசியமில்லை. அவர்களைக்குறித்து வெறுப்படையவேண்டிய தேவையுமில்லை. ஏனென்றால் தேவனே அவர்களை நான் அழிப்பேன், அவமாக்குவேன் என்று சொல்லுகிறார். அவர்கள் எதை மேன்மையாக உயர்வாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ, எதினிமித்தம் அவர்களை உலகம் மேனமையாக எண்ணிக் கொண்டிருக்கிறதோ, அவைகளைத் தேவன் அழிப்பார். “ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? (1 கொரி 1:20).

      இந்த சுவிசேஷம் பழமையாய் காணப்படலாம். இது பழங்காலத்துக்கதை என்று எண்ணி நகையாடலம். ஆனால் பத்தியமாகத் தோன்றுகிற இவைகளினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று. நமக்கு கிறிஸ்துவே தேவ பெலனும் தேவஞானமுமாயிருக்கிறார். அன்பானவர்களே! நீ உலக ஞானிகள், புத்திசாலிகள் என்று சொல்லப்படுபவர்களைப் பார்த்து ஏமாந்துப் போகாதே. அவர்களின் முடிவு அழிவு. நீதிமானோ என்றைக்கும் பிழைத்திருப்பார். தேவனுடைய சுவிசேஷத்தை விசுவாசித்து வா, தேவன் உன்னை இரட்சிப்பார்.