கிருபை சத்திய தின தியானம்

நவம்பர் 07                             தேவ சித்தம்             1 யோவான் 2:15-25

தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ

என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” (1 யோவான் 2:17)

 

    தேவன் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், அவருடைய சித்தத்தை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நாம் நம்முடைய தீர்மானங்கள், செயல்பாடுகளில் தேவனுடைய சித்தத்தை அறிந்து செய்வதே நமக்கு நன்மையானது, பாதுகாப்பானது. ஆண்டவராகிய இயேசுவுக்கு யார் பிரியமானவர்கள்? பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்ததின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறான் என்றார். (மத் 12 : 50 ).

    பவுல் கொலோசே பட்டணத்தில் இருந்த விசுவாசிகளுக்காக எப்படி ஜெபிக்கிறார் என்று பாருங்கள். அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும் ……. உங்ககளுக்கு வேண்டுதல் செய்கிறோம்’ (கொலோ 1:9).

    இன்றைக்கு அநேகர் தேவ சித்தத்தை தங்களுடைய வாழ்க்கையில் நிறைவேற்றாததால் எவ்வளவு கண்ணீர் விடுகிறார்கள்! தங்களுடைய திருமணத்தில் எத்தனை வாலிபர்கள், வாலிப பெண்கள், தேவனுடைய சித்தத்தைத் தேடுவதற்கு பதிலாக பணத்தையும், படிப்பையும், அழகையும் பார்த்துச் செயல்பட்டு விடுகிறார்கள். எத்தனை கிறிஸ்தவ பெற்றோர்கள் அவ்விதம் செயல்பட்டு வருத்தப்படுகிறார்கள்.

    தேவனுடைய சித்தம் அறிந்து செயல்படுகிற வாழ்க்கை நமது ஆவிக்குரிய முதிர்ச்சியைக் காட்டுகிறது. ‘தேவனுடைய …….. சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். (ரோமர் 12:2) நாமும் பவுலைப் போல ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்? ‘என்று ஒவ்வொரு அடியிலும் ஜெபத்தோடு செயல்படும் போது தேவனுடைய ஆசீர்வாதத்தை நாம் பார்க்கமுடியும். பின்னானவைகளை விட்டு இனியாகிலும் தேவனுடைய சித்தத்தைத் தேடு. தேவன் ஒருபோதும் கை விடார்.