கிருபை சத்திய தின தியானம்

நவம்பர் 9                            கர்த்தரின் வழிகள்                      ஏசாயா  55:1-13

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல;

உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசாயா 55:8)

    எப்போதும் மனிதனின் வழிகளும் நினவுகளும் மிகவும் அற்பமானவைகள். அவன் இவ்வுலகத்துக்குரியவனாய், அநேகம் சிந்தனைகளைக் கொண்டவனாய் இருக்கிறான். ஆனால் தேவன் உன்னதமானவர், உயர்ந்தவர், மகத்துவமானவர். அவருடைய நினவுகளும், வழிகளும் மனிதனுக்கு எட்டாத உயரமானவைகள், மேலானவைகள். இன்றைக்கு அநேகர் தேவன் அவர்களுக்கென்று மேலான நோக்கங்களையும், திட்டங்களையும் கொண்டிருக்கும்போது அவைகளை அறியாதவர்களாய், தேடாதவர்களாய், அற்ப காரியங்களையே தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சகோதரனே! சகோதரியே! தேவன் உங்களுக்கென்று கொண்டிருக்கின்ற உன்னதமான வழிகளை இன்னும் ஏன் அறியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்?

    “தேவனுடைய வழி உத்தமமானது (சங்கீதம் 18:30). அதாவது தேவனுடைய வழி பரிபூரணமானது. அது உன் ஆத்துமா, சரீரம் அனைத்திற்கும் ஆசீர்வாதமானது. நம்முடைய வழி பாவமுள்ளது, வேதனை நிரம்பியது. அவருடைய வழியைத் தேடு. அது உனக்கு குறைவற்ற நிறைவைக் கொடுக்கும். கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள் (ஓசியா 14:9) ஆம்! அவைகளில் ஒருபோதும் குறைவில்லை, தவறானது ஒன்றுமில்லை. ஆகவே எப்போதும் அனுதினமும் ‘ஆண்டவரே, என்னுடைய சொந்த வழிகள் எனக்கு வேண்டாம். உம்முடைய வழிகளில் என்னை நடத்தும், எனக்கென்று நீர் மேலான நோக்கத்தையும், திட்டங்களையும் கொண்டிருக்கும்போது நான் ஏன் என்னுடைய கீழான வழிகளில்  நடக்கவேண்டும்’ என்று ஜெபி. “மேலும் பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழியைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினவுகளும் உயர்ந்திருக்கிறது (ஏசாயா 55:9) ஆகவே நாம் எப்போதும், எல்லாவற்றிலும் உம்முடைய வழிகளில் என்னை நடத்தும் என்றும், உம்முடைய நினைவுகளை அறிந்து வாழ எங்களுக்கு உதவிசெய்யும் என்றும் ஜெபிக்க வேண்டும்.