கிருபை சத்திய தின தியானம்

மார்ச் 12                   யுத்தம் கர்த்தருடையது          2 நாளா 20:1–23

     ‘இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது’ (2 நாளா 20:15).

     நமக்கு எதிராக எழும்புகிற போராட்டங்களைக் காணும்பொழுது நம்முடைய பெலத்தைக் கொண்டு அவைகளை மேற்கொள்ளும்படியாக அநேக சமயங்களில் நாம் திட்டம் வகுக்கிறோம் அல்லது அவைகளைப் பார்த்து பயப்படுகிறோம். உதாரணமாக சீரியாவிலிருந்து ஏராளமான ஜனங்கள் படையெடுத்து வருகிறார்கள் என்று கேட்டபொழுது யோசபாத் ராஜா பயந்தான் (2நாளா 20:2–3). அநேக சமயங்களில் நாமும்  யுத்தம் கர்த்தருடையது என்பதை மறந்துவிடுகிறோம். அந்நாளில் சம்பவித்த காரியங்களை எண்ணிப்பார்க்கும் பொழுது எவ்வளவாக தேவன் வெற்றி அருளச் செய்கிறார் என்று பார்க்கிறோம். 

        தேவன் அங்கு சொன்ன ஒரு காரியம், ‘இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்’(2 நாளா 20:17). நம் வாழ்க்கையில் நாம் தரித்திருந்து தேவனுடைய இரட்சிப்பை பார்க்கும்படியாக தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடுகிறோம். இந்த யுத்தத்தின் முடிவு என்னவாயிற்று? ‘பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான். அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்’(2 நாளா 20:21–22) என்று நாம் வாசிக்கிறோம். அன்பானவர்களே! உங்களுக்கு எதிராக திரள் கூட்டமான மக்களைப் போன்ற போராட்டங்கள் எழும்பினாலும், அமைதியாக தேவனுடைய சமுகத்தில் காத்திரு. கர்த்தர் அவைகளை முறியடிக்க வல்லவர். கர்த்தர் உன் பட்சத்தில் நின்று உனக்காக யுத்தம் செய்து வெற்றியை உனக்கு கட்டளையிடுவார்.