பிப்ரவரி 18

“கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது;” (1சாமுவேல் 17: 47).

தாவீது தன்னுடைய வாழ்க்கையில் தன் சிறுவயதிலிருந்தே தேவன் எவ்வாறு அவனை வழிநடத்தினார் என்பதைக் குறித்து அறிந்திருந்தான். இப்பொழுது கோலியாத் இஸ்ரவேல் மக்களுக்கு எதிராக நின்றபொழுது, இஸ்ரவேல் மக்கள் பயந்து நடுங்கி ஒழித்துக்கொண்டார்கள். ஆனால் தாவீதோ தேவன் மேல் விசுவாசம் கொண்டவனாக கோலியாத்தை எதிர்த்து நிற்கிறதைப் பார்க்கிறோம். அவன் இவ்விதமாய் எதிர்த்து நிற்க அவனுக்குள்ளாக இருக்கும் உறுதியான விசுவாசம் என்ன? “யுத்தம் என்னுடையதல்ல, யுத்தம் கர்த்தருடையது”. நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும்படியான ஒவ்வொரு போராட்டமும் கோலியாத்தைப் போல மிக பயமுறுத்தக்கூடியதாக இருக்கலாம். ஆனால் நாம் தாவீதைப் போல இவ்விதமாய் அறிக்கையிடுகிறவர்களாகக் காணப்படுவது அவசியம். யுத்தம் கர்த்தருடையது. யோசபாத் தன்னுடைய வாழ்க்கையில் பயங்கரமான ஒரு போராட்டத்தைச் சந்தித்தான். “இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்” (2 நாளாகமம் 20:1). இவ்விதமான சூழ்நிலையில் யோசபாத் தேவனைச் சார்ந்து அவரைப் பற்றிக்கொள்கிறதைப் பார்க்கிறோம். அப்பொழுது அவனுக்குச் சொல்லப்பட்ட காரியம் என்னவென்றால் “சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது” (2நாளாகமம் 20:15) நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு போராட்டம் எவ்வளவு கொடியதாய் காணப்பட்டாலும், ஒன்றை விளங்கிக்கொள்வோம் “யுத்தம் கர்த்தருடையது”. என்னுடைய பெலத்தினாலும் ஞானத்தினாலும் இந்த யுத்தத்தை நான் ஜெயிக்க முடியாது. தாவீது கர்த்தரை நம்பிச் சார்ந்து கொண்டபொழுது, கோலியாத் முறியடிக்கப்பட்டான். யோசபாத்துக்கு எதிராக வந்த சேனையும் அழிக்கப்பட்டதை நாம் வாசிக்கின்றோம், நாம் சந்திக்கின்ற எந்தப் பிரச்சனையானாலும் யுத்தம் கர்த்தருடையது, எனக்காக அவர் யுத்தம் செய்கிறார் என்ற விசுவாசமும் நம்பிக்கையும் ஒருக்காலும் நம்மை விட்டு நீங்காதாபடிக்கு கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக.