ஜூலை 8               

“நான் கூப்பிட்டும் மறு உத்திரவு கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து நான் விரும்பாததைத் தெரிந்துக்கொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துககொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்” (ஏசாயா 66:4)

       இந்த வசனத்தை வாசிக்கும்போது பயமாயிருக்கிறதா? அப்படியானால் அது நல்ல அறிகுறி. உங்கள் ஆத்துமாவில் நீங்கள் உணர்வுள்ளவர்களாக இருப்பதை அது குறிக்கிறது. தேவன் கூப்பிட்டபோது, நான் எப்போது மறு உத்தரவு கொடுக்கவில்லை. என்று கேட்க்கிறாயா? தேவனுடைய வார்த்தையை நீ ஆலயத்தில் கேட்கும்போது தேவன் உன்னைக் கூப்பிடுகிறார். தேவன் தம்முடைய வார்த்தையின் மூலமாய் பேசுகிறார். தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தி, நம்மிடத்தில் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை தெரிவிக்கிறார். ஆனால் இவ்விதமான கூப்பிடுதலை, நீ எப்படி எதிர்கொள்கிறாய் என்பது அதிக முக்கியமானது. அநேகர் அதை ஒரு வழக்கமான காரியம் என்று எண்ணுகிறார்கள். தேவாதி தேவன் என்னிடத்தில் எதிர்ப்பார்ப்பதை வெளிப்படுத்துகிறார் என்று சிறிதேனும் எண்ணுவதில்லை, அதைக்குறித்தும் சிந்திப்பதில்லை. அதை அதிக ஜாக்கிரதையாக எடுத்துக் கொள்வதில்லை.

      ஒருவேளை நீ அப்படி தேவனுடைய அழைப்பை அலட்சியப்படுத்துவது எந்த பாதிப்பையும் உண்டுபண்ணாது என்று எண்ணுகிறாயா? இல்லை. தேவன் இந்த வார்த்தையில் அதின் பாதிப்பை எடுத்துச் சொல்லுகிறார். அது என்ன? ஒன்று, நான் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்து கொள்ளுவேன்” , இரண்டாவது “திகில்களை அவர்கள் மேல் வரப்பண்ணுவேன்” . நீ இவைகளை விரும்புகிராயா? நீ அறியவேண்டிய் மிக முக்கியமான காரியம் என்னவென்றால், உன்னுடைய காலம் எப்போதும் இப்படியே இருக்கும் என்று எண்ணாதே. தேவன் நீடிய பொறுமை உள்ளவர் என்பது உண்மை. ஆனால் அதற்கும் ஒரு எல்லையைக்குறித்திருக்கிறார். அவர் உன்னை நேசிப்பதின் நிமித்தம் நீ தேவன் பக்கமாகத் திரும்பவேண்டும் என்ற எண்ணத்தோடே தேவன் இதைச் சொல்லுகிறார். நீ தேவனுடைய சத்தத்திற்குச் செவிகொடு. அது நல்லது.