கிருபை சத்திய தின தியானம்
ஜனவரி 10 மறைவானவைகள் கர்த்தருக்குரியவை உபா 29: 1-29
‘மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்;
வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின்
வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய
பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்’ (உபா 29:29).
நம்முடைய வாழ்க்கையில் அநேக காரியங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவைகள் தீமைக்கு ஏதுவானவைகள் அல்ல, நன்மைக்கு ஏதுவானவைகளே. கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் இவைகளை நன்மைக்கு ஏதுவாக மறைத்து வைத்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுவது அவசியமானது. தாவீது இராஜா, ‘கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்’ (சங் 25:14) என்று சொல்லுகிறார்.
தேவன் தம்முடைய மக்களுக்கு மறைவானவைகளை ஏற்ற நேரத்தில், ஏற்ற விதத்தில் தெரியப்படுத்துகிறவராக இருக்கிறார். தேவனுடைய பிள்ளைகளுக்கு எந்த வேளையில் அதை வெளிப்படுத்த வேண்டுமென்ற திட்டத்தை வைத்துள்ளார். ஆகவே நம்முடைய வாழ்க்கையில் மறைபொருளானவைகளைக் குறித்து நாம் பயப்படவேண்டிய அவசியமில்லை. மேலுமாக, ‘அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்’(தானி 2:22) என்று வேதம் சொல்லுகிறது.
அவர் நம்முடைய வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கட்டளையிடுகிறவராக இருக்கிறார். ஆகவே நாம் செய்ய வேண்டியது என்ன? நாமும் நம்முடைய பிள்ளைகளும் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் உள்ளபடி செய்ய ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்முடைய பிள்ளைகளுக்கு உபாகமத்தில் சொல்லப்பட்ட வண்ணமாக நியாயப்பிரமாணத்தை கருத்தாக போதித்துக் கட்டளையிட வேண்டும் (உபா 6:7). நாம் வீட்டில் உட்கார்ந்து இருக்கும் பொழுதும், படுத்திருக்கும் பொழுதும், எழுந்திருக்கும் பொழுதும் நாம் வேதத்தைக் குறித்து போதிக்க வேண்டும். மற்ற காரியங்களைக் கர்த்தர் பார்த்துக் கொள்ளுவார். தேவனிடத்தில் வருபவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவானவைகளே.