காலம் கடந்து போய்க்கொண்டிருக்கிறது

     நாம் ஒவ்வொருவரும் ஒரு ஆண்டு கழித்து  ஒரு புதிய ஆண்டிற்குள் பிரவேசிக்கிறோம். நம்முடைய காலம் கடந்து போய்க்கொண்டே இருக்கிறது. ஆனால் நிச்சயமாக ஒரு நாள் இது நின்றுவிடும். நாம் இந்த ஓட்டத்தை முடிக்கும்படியான நாள், வேளை ………  அநேக சமயங்களில் நாம் இதை எண்ணிப்பார்ப்பதில்லை. வேதம் நம்முடைய வாழ்க்கை ஒரு புகைக்கு ஒப்பாயிருக்கிறது என்று  சொல்லுகிறது.                                                                         அப்படியானால் இந்த வாழ்க்கையின் நோக்கமென்ன? இந்த வாழ்க்கையில் நாம் சாதிக்கக்கூடிய காரியம் என்ன? நம்முடைய  இந்த வாழ்க்கையில் நான் செய்யக்கூடிய அர்த்தமுள்ள காரியம் என்ன என்பதை அநேக சமயங்களில் சிந்திப்பதில்லை.

    நாம் அநேக சமயங்களில் இவ்வுலக எதிர்காலத்தைக்குறித்து கவலைப்படுகிறோம். ஆனால் நித்தியத்தைக்குறித்து கவலைப்படுவதில்லை. எதிர்காலத்தைக்குறித்து அக்கரையுள்ளவர்களாய்  செயல்படுகிறோம். ஆனால் நித்தியத்தைக்குறித்து அவ்விதம் செயல்படுவதில்லை. நம்முடைய காலங்கள் கடந்துப்  போய்கொண்டேயிருக்கிறது. நாம் திரும்பிப் பார்ப்போமானால் எத்தனையோ ஆண்டுகாலமாக நம்முடைய வாழ்க்கையில் நித்தியத்தைக்குறித்த எண்ணமற்றவர்களாகவே கழித்துவிட்டோம். ஆனால் இப்பொழுது நமக்கு ஒரு புதிய ஆண்டைக் கர்த்தர் கொடுத்திருக்கிறார். நாளைக்காக கவலைப் படாதிருங்கள் என்று இயேசுகிறிஸ்து சொன்னதை நாம் பின்பற்றும் பொழுது இந்த உலகத்தின் காரியங்களுக்காக நாம் கவலைப்படுவதை நிறுத்தி அதை தேவனுடைய கரத்தில் கொடுத்து நித்தியத்தின் காரியங்களைப் பறறி நாம் சிந்திக்க ஆரம்பிப்போம் . வேதம் தெளிவாய் சொல்லுகிற ஒரு சத்தியம் என்னவெனில் நம்முடைய வாழ்க்கையில் நித்தியத்தைக் குறித்த காரியத்தில்  நிச்சயப்படுத்திக்கொள்ளுவதில் நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதே. காலம் கடந்துச்செல்லுகிறது. ஆனால் நான் நித்தியத்தைக்குறித்த காரியத்தில் என்னசெய்யப் போகிறேன். நாளைக்காக கவலைப்படுவதை நிறுத்துவோம். நித்தியத்திற்கான காரியத்தை எண்ணிப்பார்ப்போம். அது நம்முடைய ஆத்துமாவிற்கு பிரயோஜனமாக இருக்கும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் நித்தியத்துக்கான எல்லா காரியங்களையும் இலவசமாக நமக்கு சம்பாதித்து வைத்திருக்கிறார். பாவ மன்னிப்பு, பாவத்திலிருந்து விடுதலை, நித்திய மரணத்திலிருந்து விடுதலை, பாவத்தின் தண்டனையிலிருந்து விடுதலையைக் கொடுத்திருக்கிறார். பாவத்தின் வல்லமையிலிருந்து அனுதினமும் விடுபட்டு நித்தியத்தை நோக்கி வெற்றி நடைபோட நமக்கு தேவன் நம்முடைய கரங்களிலே நித்தியமான ஒரு வேத புத்தகத்தைக் கொடுத்திருக்கிறார். ஆகவே அவைகளை நாம்  பின்பற்றுவதில் ஜாக்கிரதையாக இருப்போம்.நிச்சயம் வெற்றியடைவோம்.