கிருபை சத்திய தின தியானம்
ஏப்ரல் 28 ஜெபத்தின் மூன்று அளவுகள் மத் 7 : 1 – 12
‘கேளுங்கள்அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திரக்கப்படும்.’ (மத்தேயு 7 : 7)
ஆண்டவராகிய இயேசு இந்த மலை பிரசங்கத்தில் அநேக ஆவிக்குரிய முத்துக்களை அள்ளித்தருகிறார். அவைகளில் ஒன்று ஜெபத்தைபற்றினது. ஜெபம் எவ்வளவு முக்கியமானது என்று வேதத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் எல்லோரும் அறிந்திருக்கிறது என்னவென்றால் ஜெபம் சாதாரணமான காரியமல்ல. அது அற்பமானதோ, சுலபமானதோ அல்ல, உண்மைதான். நம்முடைய இருதயம் தேவன் பேரில் வாஞ்சையாக இருக்கும்பொழுது ஜெபம் தானாக நம் இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும் ஊற்றைப்போல் இருக்கும். நீரானது புரண்டு வருவதுபோல் பிரவாகித்து ஓடும். ஆனால் எல்லா சமையங்களிலும் அவ்விதம் இருக்கும் என்று சொல்லமுடியாது. அநேக சமையங்களில் ஜெபிக்க சுயாதீனமற்றவர்களாய் காணப்படுவோம். ஜெபிக்க விரும்பினாலும் பல தடைகள், இருதயத்தில் கலக்கம், அமைதியின்மை, சாத்தானின் தாக்குதல் என்று பலவிதமான இடற்பாடுகள் எழும்புவதும் உண்டு.
மேலே சொல்லப்பட்ட வசனத்தில் மூன்று விதங்களைப் பார்க்கிறோம் ஒன்று கேட்பது இதற்கு அதிகமான பிரயாசம் தேவையில்லை. அடுத்து தேடுவது, இதில் முந்தையதைக் காட்டிலும் அதிகமான பிரயாசம் தேவை. மூன்றாவதாக தட்டுவது, இதற்கு இன்னும் கொஞ்சம் அதிகமான பிரயாசம் தேவைப்படுகிறது. அதாவது முதல் விதத்தில் பார்க்கும்போது ஜெபிப்பது உணக்கு சுலபமாக இருக்கும். ஜெபத்தின் ஆவியை தடையில்லாமல் கொண்டிருப்பாய். அப்பொழுது நீ ஜெபிப்பது அதிக கஷ்டமாயிருக்காது. அடுத்தது கொஞ்சம் சிரமமெடுத்து நீ ஜெபிக்கவேண்டும். இந்த வேளையில் ஜெபம் சுலமாக வராது. ஜெபிக்கும் சுயாதீனமானது அதிகம் இல்லாமல் இருக்கும், இந்த வேளையில் நீ ஜெபிக்கமுடியவில்லை என்று ஜெபத்தை விட்டு விடாமல் இன்னும் கொஞ்சம் பிரயாசம் எடுத்து ஜெபிக்க வேண்டும். மூன்றாவதாக ஜெபிக்கவே முடியாது போல இருக்கும். அப்பொழுது நீ பலமாய் ஜெபக் கதவை தட்டவேண்டும். வலுவாய் நின்று ஜெபிக்கவேண்டும் அப்போது நீ வெற்றி பெறுவாய். அநேகர் இந்த விதங்களில் ஜெபிக்காததால் ஜெபவாழ்க்கையில் தோல்வியுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.