கிருபை சத்திய தின தியானம்

செப்டம்பர் 10                   கர்த்தருடைய ஆலயம்         சங்கீதம் 122:1–9

கர்த்தருடைய ஆலயத்திற்கு போவோம் வாருங்கள் என்று எனக்கு  

அவர்கள் சொல்லும்போது மகிழ்ச்சியாயிருந்தேன் (சங் 122:1)

 

    இன்று நீயும் இவ்விதம் சொல்லமுடிகிறதா? இன்று அநேகர் அற்ப காரணங்களுக்காக தேவனுடைய ஆலயத்தை, சபைக் கூட்டங்களை அலட்சியப்படுத்துகிறார்கள். அதை அற்பமாய் எண்ணுகிறார்கள். அப்படி ஆலயக் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாமல் போனதைக்குறித்து வெட்கப்படுவதுமில்லை, வருத்தப்படுவதுமில்லை. ஆனால் இது மிகப்பெரிய இழப்பு என்பதை அறிந்து கொள். நீ ஆலயத்தை அசட்டை செய்யும்போது, தேவனை அசட்டை செய்கிறாய். அவர் உனக்கு அற்பமானவராய் போய்விட்டார். அவரை அசட்டை செய்து நீ ஆசீர்வதிக்கப்படமுடியும் என்று நினைக்கிறாயா? அப்படியொரு எண்ணம் உனக்கு இருக்குமானால், பிசாசு உன்னை வஞ்சிக்கிறான் என்பதை அறிந்துகொள்.

    ஏன் இவர்கள் ஆலயத்தை அசட்டை செய்கிறார்கள்? முதலாவது இவர்களுக்கு ஆவிக்குரிய வாழ்க்கையைக் குறித்த விலை மதிப்பு கிடையாது. இந்த உலகத்திற்காகவே வாழவிரும்புகிறார்கள். எந்த ஒரு மனிதன் தேவனுடைய காரியங்களை அசட்டை செய்கிறனோ, அவன் மெய்யான ஆசீர்வாதத்தைக் காணமுடியாது. அவ்விதமான மக்கள் சாம்பலை மேய்கிறார்கள். தங்களுக்கு மெய்யான சமாதானத்தையும், நித்திய ஜீவனையும் கொடுக்கும் வழியை புறக்கனித்து எவ்வளவு தின்றாலும் திருப்திப்படுத்தாத சாம்பலைத் தேடுகிறவர்கள்.

     தேவன் இவ்விதமான மக்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார் அது என்ன? நீங்கள் அப்பமல்லாததிற்காக பணத்தையும், திருப்தி செய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்கு கவனமாய் செவிக்கொடுத்து நலமானதச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்தத்தினால் மகிழ்ச்சியாகும் (ஏசாயா 55:2) சகோதரனே! சகோதரியே! யோசித்துப்பார், நீ இன்னும் ஆலயத்தை அசட்டைபண்ண விரும்புகிறாயா? இனிமேலும் இந்த பாவத்தைச் செய்யாதே.