ஜூன் 9       

      “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்” (சங் 121:2).

      சங்கீதக்காரனின் நம்பிக்கை மனிதனை சார்ந்ததல்ல. சர்வத்தையும் உண்டாக்கி ஆளுகிற தேவன் மேல் இருந்தது. நம்முடைய நம்பிக்கை எதன்பேரில் இருக்கிறது? நிச்சயமாக நாம் கர்த்தரிடத்தில் இருந்து ஒத்தாசையை எதிர்ப்பார்க்கலாம். விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் அவரை நோக்கிப் பார்க்கும்பொழுது பரத்திலிருந்து நமக்கு ஒத்தாசை அனுப்புகிறவராக இருக்கிறார். இன்னுமாக அவர் நம்மை பாதுகாக்கிறவராக இருக்கிறார். “நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது” (சங் 124:8) என்று வேதம் சொல்லுகிறது.

      இந்த உலகத்தில் ஒத்தாசையை, கிருபையை, இரக்கத்தை, நன்மையை வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தர் நமக்குக் கொடுக்கிறார். மனிதனை நம்புவது வீண். நம்முடைய அறிவையும், ஞானத்தையும் சார்ந்திருப்பது வீண். ஆனால் கர்த்தரை நம்புவோருக்கு எப்பொழுதும் நன்மையே. அவர்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போகமாட்டார்கள். ஆகவேதான் வேதம்: “யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்” (சங் 146:5-6) என்று சொல்லுகிறது.

      மனிதன் மாறுகிறவன். சூழ்நிலைகள் மாறக்கூடியவைகள். நம்முடைய அநேக எதிர்பார்ப்புகள் தோல்வியையே தழுவுகிறது. ஆனால் கர்த்தர் ஒருபோதும் மாறாதவர். அவருடைய வார்த்தை ஒருகாலும் மாறாதது. அவர் நிச்சயம் வாக்குப்பண்ணினதை நிறைவேற்றாமல் விடுகிறவரல்ல. தம்முடைய மக்களைப் பராமரிப்பதில் அவர் தவறினதே கிடையாது. “சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” (ஏசாயா 40:29) என்று வேதம் சொல்லுகிறது. உன்னுடைய சோர்வுகள், தளர்வுகள், நம்பிக்கையின்மையின் மத்தியில் அவர் உனக்குப் போதுமானவராக இருக்கிறார். அவர் உன்னை பெலப்படுத்துகிறவராக இருக்கிறார். அவரை நீ சார்ந்துகொள்.