பிப்ரவரி 20

“ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்” (லூக்கா 18:13).

 நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பாவ அறிக்கை செய்கிற வழக்கமுள்ளவர்களாக இருந்தால் மட்டுமே ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர முடியும். பாவ அறிக்கை செய்யாதவர்களின் வாழ்க்கையில் அவர்கள் அநேக வேளைகளில் தங்கள் பாவ பழக்கவழக்கங்களில் எதாவது ஒரு விதத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறவர்களாகவே காணப்படுவார்கள். அவர்களுக்கு மெய்யான உணர்வு என்பது இருக்காது. இன்னும் சிலர், நான் என் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஆண்டவரை அநேக ஆண்டுகளாக அறிந்திருக்கிறேன், ஆகவே எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் அவர்களைத் தவறாய் வழிநடத்திவிடும். ஆகவே நான் இவ்விதமாக ஒரு அறிக்கையின் ஜெபத்தை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று எண்ணுகிற மனநிலையுள்ள அநேக விசுவாசிகளை நாம் இன்று பார்க்கிறோம். ஆனால் ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ள தேவ மனிதன் அல்லது ஆவிக்குரிய வாழ்க்கையில் தொடர்ந்து வளர்ந்து வருகின்ற மனிதனின் வாழ்க்கையில் ஆவிக்குரிய உணர்வு அதிகமாக இருக்கும். பரிசுத்த ஆவியானவர் அவர்களின் வாழ்க்கையில் எந்தெந்தப் பகுதிகளில் அவர்கள் தங்களைச் சரிப்படுத்த வேண்டும் என்று உணர்த்தும்போது அவர்கள் அதை உணர்ந்து கொண்டு தங்களைத் தாழ்த்தி தேவனுக்கு முன்பாக ஜெபிப்பார்கள். உதாரணமாக விசுவாசிகள் என்று சொல்லப்படுகிறவர்களின் வாழ்க்கையில் பெருமை சாதாரணமாக வெளிப்படும். ஆனால் அவர்கள் அதைக் குறித்து உணர்கிறவர்களாய் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் பரிசுத்த ஆவியானவரின் உணர்த்துதலின் உணர்வு அவர்களில் இருப்பதில்லை. பரிசுத்த ஆவியானவர் அதைக் குறித்தும் உணர்த்தும் போதும் அவர்கள் அதை அற்பமாய் எண்ணி அலட்சியப்படுத்துவதும் உண்டு. இது ஆண்டவரை துக்கப்படுத்துகிறது என்ற மனவருத்தம் இல்லாதவர்களாய் வாழுவார்கள். பாவ அறிக்கை செய்கிற ஒரு வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான காரியம் என்னவென்றால், ஒரு நல்ல ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ள வளர்ச்சியைப் அவர்களில் பார்க்க முடியும். கிறிஸ்துவைப் போல வளருகிறவர்களாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவார்கள். நம்முடைய வாழ்க்கையில் இடைவிடாமல் ஜெபிப்பதற்கு இவ்விதமான காரியங்கள் அதிக உதவியாய் இருக்கும்.