மார்ச் 2               

“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” மத்தேயு 7:7-11

அநேக வேளைகளில் நான் தேவனிடத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்க இந்த வசனங்கள் எனக்கு உதவியாக இருக்கிறது. தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கிறார் என்ற நிச்சயத்தைக் கொடுக்கிற இந்தக் காரியம் மிக எளிமையான தாக இருந்தாலும் கூட, மிக ஆழமானதாக இருக்கிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள முடிகிறது. நம்முடைய பலவிதமான தேவைகளை பாரங்களை கர்த்தருடைய சமூகத்தில் கொடுத்து, அவர் இந்த ஜெபத்திற்கான பதிலை நிச்சயம் கொடுப்பார் என்பதை நம்பக்கூடிய விதத்தில் ஆண்டவர் தம்முடைய மாறாத உண்மைத் தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறதைப் பார்க்கிறோம். தேவன் தம்முடைய வார்த்தையில் உண்மையுள்ளவர். அநேக வேளைகளில் நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையைச் சந்தேகிக்கிறோம். அதைச் சார்ந்துகொள்வதில் நாம் குறைவுள்ளவர்களாய்க் காணப்படுகிறோம். ஆண்டவர் சொல்லுகிறார், “நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் குறித்து ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் விண்ணப்பத்தினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று அழகாகச் சொல்லுகிறார்.  பொதுவாக எந்த ஒரு நல்ல தகப்பனும் தன்னுடைய பிள்ளையின் நலனை விரும்புவான். அவன் தன் பிள்ளைக்காக மிகச் சிறந்ததை செய்ய விரும்புகிறவன். ஆகவே பரம பிதாவாகிய நம்முடைய தகப்பனாகிய அவருடைய கரத்தில் நம்மை ஒப்புவிக்கும்பொழுது நம்முடைய காரியங்களை மிகச் சிறந்த முறையில் கையாள அவர் அறிந்திருக்கிறபடியால் அவர் ஏற்ற வேளையில் ஏற்ற விதத்தில் அதைச் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையோடு அவரிடத்தில் நாம் ஜெபிக்கவும் அவரைச் சார்ந்துகொள்ளவும் இவ்விதமான வசனம் நமக்குப் போதுமானதாக இருக்கிறது. நம்முடைய ஜெப வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் இருக்கும்.