அக்டோபர் 30                                  

“மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு,  நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்” உபா 29:29

    நம்முடைய விசுவாச வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் பதிலைக் கண்டுக்கொள்ள முடியாது. அநேக சமயங்களில் ஏன் எனக்கு இந்தவிதமான காரியங்கள் நேரிடுகிறதென்று தடுமாறுகிறோம். அன்பானவரே! வேதம் சொல்லுகிறது “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்”. அது தேவனுக்குத்தான் தெரியும். திடீரென்று மரணம், திடீரென்று எதிர்பாராத சோதனை. ஏன்? ஏன்? நான் தேவனை நேசித்து அவருக்காக வாழ்ந்து கொண்டிருக்கிற எனக்கு ஏன்  இந்த வியாதி? நீ கலங்காதே, எல்லாவற்றையும் அறிந்திருக்கிற தேவன் ஒரு நோக்கமில்லாமல் உன்னுடைய வாழ்க்கையில் எதையும் அனுமதிக்கமாட்டார்.

    சில காரியங்களில், நீ எதிர்பாராத படுதோல்வியை சந்திக்கலாம். ஏன் இந்த தோல்வியென்று அங்கலாய்க்கலாம். சகோதரனே! சகோதரியே! நீ விசுவாசிக்கும் தேவன் உனக்கு ஒருபோது தீமையைத் தீமையாக அனுமதிக்கிறவார் அல்ல. ஆகவே இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்வது என்று கேட்கிறாயா? தேவனிடத்தில் உன் காரியத்தை ஒப்புகொடு. அவர் சகலத்தையும் அறிந்தவர். அவரை முழுவதுமாக சார்ந்துகொள்.

    உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு.’ (சங்  37:5) தேவனிடத்தில் அதை கடந்துபோக பெலனை கேள். அமரிக்கையும் நம்பிக்கையுமே உன் பெலனாய் இருக்கும். சூழ்நிலையை, மனிதர்களை குற்றசாட்டாதே, தேவனையே நோக்கிப்பார். “கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரபடுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு” (சங் 27:14) ஒருவேளை நீ இந்த உலகத்தில் பதிலை பெறாவிட்டாலும் நித்தியத்தில் அதன் பதிலை பெறுவாய். ‘எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்’. (தானி 9:14) புரியாதவைகளை தேவனிடத்தில் ஒப்புக்கொடு, புரிந்தவைகளில் தொடர்ந்திரு.