ஜூலை 2
“நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின” (சங் 119:54).
ஒரு கிறிஸ்தவனுக்கு நிலையான வீடு இவ்வுலகமல்ல. இந்த உலக வாழ்க்கை ஒரு வாடகை வீடுதான். அவனை எந்த நேரத்தில் தேவன் அழைக்கிறாரோ, அந்த நேரத்தில் வீட்டை காலிசெய்ய வேண்டியதுதான். அது மாத்திரமல்ல அவனுக்கு இந்த வாழ்க்கை நிலையானதல்ல என்ற உணர்வோடு ஒவ்வொரு நாளும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். அவன் பரதேசி, அதாவது ஒரு வழிப்பிரயாணி. வேகமாய் கடந்துப்போகிற நாட்கள் வழியாக அவன் பிரயாணம் செய்கிறான். அவன் இந்த நாட்களில் கடந்துச் செல்லவேண்டிய அநேக மேடுகள், பள்ளங்கள், படுகுழிகள் உண்டு. இவைகளின் வழியில் அவன் கடந்துச் செல்லும்போது, அவனுக்கு மெய்யான ஆறுதலையும் தேறுதலையும் கொடுக்கக்கூடியது, அவனுக்கு வழிக்காட்டக்கூடியது தேவனுடைய வார்த்தைதான். அதுவே அவனுக்கு பாடும் பாடலாக இருக்கிறது. அவ்விதமாகவே தேவனுடைய வார்த்தை, அவனுக்கு விடாய்த்துப்போகிற வழிபிரயாணத்தில் தாகந்தீர்க்கும் நீரூற்றாய் இருக்கிறது. ஆகவே நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையை, அதன் மூலமாக தேவன் வைத்திருக்கும் மெய்யான ஆசீர்வாதத்தைப் புறக்கணிப்பது பெரிய இழப்பாகும்.
ஆனாலும் இந்த வாழ்க்கையில் நீ சந்தோஷமாக கடந்து செல்ல, கர்த்தர் உனக்கு ஒவ்வொரு நாளும் தேவையான சத்தியத்தை இந்த வேதத்தில் வைத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையை வாசித்து தியானிக்கும்பொழுது, தேவன் அதன் மூலம் தேவையான ஆத்தும ஆகாரத்தைத் தந்து உன்னைப் பெலப்படுத்துவார். உன் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் தேவனுடைய வார்த்தை போதுமானதாக இருக்கும். உம்முடைய பிரமானங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும். (சங்கீதம் 119:171). உன்னுடைய துன்ப வேளையிலும், தேவனுடைய வார்த்தை உனக்கு இன்பம்மளிக்கக்கூடியதாய் இருக்கும். அன்பானவரே! தேவனுடைய வார்த்தை அவ்விதம் உனக்கிருக்கிறதா?