“நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் பண்ணுவார்கள்” (சங்கீதம் 140:13).

நாம் நம்முடைய நீதியினால் இரட்சிக்கப்படவில்லை. கிறிஸ்துவின் நீதியினால் நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவானவர் செலுத்தின கிரயம் மிகப் பெரியது. தம் ஜீவனையே நமக்காகக் கொடுத்தார். ஆனால் அது நமக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய நீதியை விசுவாசித்து அதினால் பிழைக்கிறோம். “நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்” என்று வேதம் சொல்லுகிறது. நீதிமான்களில் காணப்படுகிற ஒரு அம்சம் தேவனைத் துதிப்பது. அவருடைய மேன்மையையும் மகத்துவத்தையும் எண்ணி மகிழ்ச்சியாய்க் களிகூருவது. இந்த உலகத்தில் அநேகர் பாவத்தில் வாசம்பண்ணும்படியாக செயல்படுகிறார்கள். அது அவர்களுடைய வாழ்க்கையை இன்னும் கசப்பாக மாற்றுகிறது. ஆனால் தேவனால் செம்மைப்படுத்தப்பட்டவர்கள் அவருடைய சமூகத்தில் வாசம் பண்ணுகிறவர்களாய் இருக்கிறார்கள். அங்கு மாத்திரமே அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டு. அதை மாத்திரமே அவர்கள் தேடுகிறவர்களாய் ஒரு மாற்றப்பட்ட இருதயத்தை தேவன் அவர்களுக்குக் கொடுத்துவிட்டார். கர்த்தருக்குள் வாசம் பண்ணுவது என்ன ஒரு மகிமையான காரியம்! அவருடைய சமூகத்தில் வாசம் பண்ணி, ஆனந்தக் களிப்போடு அவரைத் துதித்து வாழுவதுமே மிகுந்த சிலாக்கியமுள்ள ஒரு வாழ்க்கை. கர்த்தர் நம்மை அவ்விதமாக ஆசீர்வதிப்பாராக.