“கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” (சங்கீதம் 55:22).

நம்முடைய வாழ்க்கையில் இந்த வசனத்தை நாம் அதிகமாய் கேட்டிருக்கின்ற வசனம் தான். ஆனாலும் கூட நம்முடைய வாழ்க்கையில் இதை நடைமுறைப்படுத்துவதில் நாம் தவறிவிடுகிறோம். பாரத்தை நாமே சுமக்கும்படியாக நாம் பிரயாசப்படுகிறோம். ஆனால் வேதம் சொல்லுகிறது, கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு என்று. கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் அநேக பாரங்களைச் சுமக்க வேண்டியிருக்கின்றது. ஆனால் இவைகள் எல்லாம் சேர்ந்து நம்மை அமிழ்த்துவதற்கான ஆபத்தும் உண்டு. ஆனால் நம்முடைய வாழ்க்கையில் ஒரு மெய்யான விடுதலையின் வழியை ஆண்டவர் வைத்திருக்கிறார் என்று அறிந்துக்கொள்ளும்பொழுது அது நமக்கு மிகுந்த ஆசீர்வாதமான ஒன்று. பாரங்கள் இருக்கின்றது. உண்மைதான். ஆனால் அந்தப் பாரங்களை நாம் சுமக்க வேண்டிய அவசியமில்லை. அதைச் சுமக்கும்படியாக எனக்காக தம்மைதாமே ஒப்புக்கொடுத்த என் அன்பின் தேவன் உண்டு. அவர் என்னை ஆதரிப்பார் என்று சொல்லும்போது, நான் ஏன் என்னுடைய பாரத்தை நானே சுமக்க வேண்டும்? இல்லை. நான் என்னுடைய பாரங்களை ஆண்டவருடைய கரங்களில் கொடுத்துவிடுவேன். அவர் என்னை நிச்சயமாக ஆதரிக்கிறவராகவே இருக்கிறார். அவர் தம்முடைய வார்த்தையில் மாறாதவர். மேலும் நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். என்ன ஒரு நம்பிக்கையான ஒரு காரியம் இல்லையா! ஆகவே நம்முடைய வாழ்க்கையில் மிகச் சிறிய பாரம் என்றாலும் மிகப் பெரிய பாரம் என்றாலும் அவருடைய சமூகத்தில் ஜெபத்திலே கொண்டு சென்று ஒப்புக்கொடுப்பேன். அவர் நிச்சயமாக என்னை ஆதரித்து என்னைத் தள்ளாடவொட்டார். அருமையானவர்களே! உங்களுடைய வாழ்க்கையிலும் உங்கள் பாரங்களை ஆண்டவரிடத்தில் ஒப்புக்கொடுங்கள். அவர் உங்களுடைய பாரங்களைச் சுமக்கிறவர் மாத்திரமல்ல, மெய்யான சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருகிறவராய் இருக்கின்றார்.