“அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்” (மத்தேயு 28:6).
இயேசுவின் உயிர்த்தெழுதல் செய்தியானது மிக உன்னதமானது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். உயிர்த்தெழுதல் என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உன்னதமான இரட்சிப்பின் நிறைவேறுதலாக, மகா மேன்மையானதாக இருக்கிறது. “அவர், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்” (1 பேதுரு 1:4). இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததின் மூலமாக ஒவ்வொரு பாவியின் வாழ்க்கையிலும் உயிர்த்தெழுதலை நிகழ்த்துகிறார். அது மறுபிறப்பு என்றும் இரட்சிப்பென்றும் நாம் அழைக்கிறோம். உயிர்த்தெழுகிற ஒவ்வொரு பாவியினிடத்திலும் காணப்படுவது ஜீவனுள்ள நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கை என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஒரு பாவிக்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சிலாக்கியம். இந்த நம்பிக்கையைக் குறித்துச் சொல்லுகிற வேளையில் அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை என்று வேதம் சொல்லுகிறது. இது வாழ்க்கையில் தன் பாவத்தினால் அழிந்து கொண்டு, ஆத்துமாவில் இளைப்பாறுதல் இல்லாமல், அனுதினமும் நொந்து வாழுகிற பாவிக்கு மிகப்பெரிய நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையின் படியே இயேசு கிறிஸ்து தனது மிகுந்த இரக்கத்தின் படியே ஒரு பாவியை மறுபடியும் பிறக்கச் செய்கிறார். தன்னைப் பாவி என்று உணருகிற ஒருவன் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மீது தன் நம்பிக்கையை வைக்கும் போது, அக்கிரமத்தினாலும் பாவத்தினாலும் மரித்த அவனை மீண்டுமாக உயிர்ப்பிக்கிறார். இன்றைக்கும் ஒவ்வொரு பாவிக்கும் இந்த உயிர்த்தெழுதல் மிகப்பெரிய ஜீவனுள்ள நம்பிக்கையாக இருக்கிறது. ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் உங்களது பாவங்களை அறிக்கையிட்டு, அவரை ஆண்டவரும் இரட்சகரும் என்று இருதயத்திலே விசுவாசியுங்கள். நீங்களும் பரலோக இராஜ்ஜியத்திற்கு தூரமானவர்கள் அல்ல.