கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 5        கர்த்தர் அடைக்கலமானவர்    சங் 9 ; 1 – 10

‘சிறுமைப்பட்டவர்களுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்’ (சங் 9 : 9 )

                 தாவீது தனது சங்கீதங்கள் அனைத்தையும் உண்மையான உணர்வோடு எழுதினான் என்பதை அவன் வாழ்க்கையோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது விளங்கிக்கொள்ளலாம். அவன் சவுல் ராஜாவினால் அதிகம் சிறுமைப்படுத்தப்பட்டான். அவனுடைய மனைவி மீகாளும் அவனை அற்பமாய் எண்ணினாள். அவனுடைய சகோதரர்கள்கூட அவனை அற்பமாகவே எண்ணினார்கள்.

            தாவீது ஒருமுறை தேவனிடத்தில் ‘என் மேல் நோக்கமாகி எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன். என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்.’ (சங் 25 : 16, 17 ). ஒருவேளை உன்னுடைய வாழ்க்கையும் சிறுமையில் கடந்துபோகும் வாழ்க்கையாக இருக்கலாம் ஆனாலும், சோர்ந்துபோகாதே. தாவீது தன் சிறுமையை மாத்திரம் நினைத்துக்கொண்டே இருக்கவில்லை. அதன் மத்தியில் தேவனில் அவன் வைத்திருக்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தினான். நான் சிறுமையும் எளிமையுமானவன் , கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்’ (சங் 40 : 17 ). ஆகவேதான் தாவீது சிறுமைப்பட்டவனுக்கு கர்த்தர் அடைக்கலமானவர் என்று சொன்னான்.

            நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்’ உன்னுடைய துன்பவேளையில் தேவனை அண்டிக்கொள்.  தேவன் உன்னை அது கடந்துப்போகுமட்டாக காத்துக்கொள்வார். மேலும் இவ்விதமான காலங்களில் தாவீதின் நம்பிக்கையைப் பாருங்கள். ‘தீங்கு நாளில் அவர் என்னைத் தம்முடைய கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார் (சங் 27 : 5 ) ஒளித்து வைப்பார் என்று மாத்திரம் சொல்லவில்லை, என்னை ஒரு நாளில் கன்மலையின்மேல் உயர்த்துவார் என்றும் நம்பினார். தாவீதை அவ்விதமாகவே உயர்த்தின தேவன், உன்னையும் உயர்த்துவார் என்று நம்பு. நிச்சயமாய் கர்த்தர் உனக்கு அவ்விதம் செய்வார்.