செப்டம்பர் 11   

“அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக, நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்”  (1சாமுவேல் 9 : 21).

சவுல் ராஜாவின் வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு திருப்பம், திடீரென்று ராஜாவாக தெரிந்துகொள்ளப்பட்டான். அந்த நேரத்தில் சவுல் கண்பிக்கும் தாழ்மையைப் பாருங்கள். தேவனுடைய உன்னத மனிதனாகிய சாமுவேலோடு விசேஷித்த அழைப்பைப்பெற்று சாப்பிட்டான். அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்கென்று  வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக  வைத்து சாப்பிடு, நான் ஜனங்களை விருந்துக்கு அழைத்தது முதல் இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்.’ (1சாமுவேல் 9 : 24) காணாமற்போன கழுதைகளைத் தேடிக்கொண்டு வந்த மனிதனுக்கு கிடைத்த மேலான  உயர்வைப் பாருங்கள். திடீரென்று இவ்விதமான உயர்வின் வேளையில் சவுல் தன் தாழ்மையை வெளிப்படுத்தினான்.

ஆனால் சவுல் கடைசிமட்டும் இந்த தாழ்மையைக் காத்துக்கொண்டானா? இல்லை. அவன் ராஜாவானபின்பு அந்த தாழ்மையை இழந்துபோனான். சாமுவேல் வருவதற்கு முன்பாக தானே பலிசெலுத்தவும் செய்தான். தேவ மனிதனுக்காக காத்திராமல் துணிகரமாக இதைச் செய்தான். இதை நாம் 1 சாமுவேலின் புத்தகம் 15ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.

அநேகர் இரட்சிப்பின் ஆரம்ப நாட்களில், ஊழியத்தின் ஆரம்ப நாட்களில் அதிகமான தாழ்மையை கொண்டிருப்பர்கள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அந்தத் தாழ்மையை இழந்து விடுவார்கள். பெருமைக்கு இடம் கொடுத்து விடுவார்கள் இது மிகவும் ஆபத்தனது. தாழ்மையில் எப்போதும்போல நாம் விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். இருதயத்தின் பெருமை கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தாழ்மையை விலக்கிக்கொண்டே இருப்பதை உணர்ந்து, சரி செய்யத் தவறிவிட்டால்  பெருமை அதிகமான பகுதியை ஆட்கொண்டுவிடும். தாழ்மையில் ஆரம்பித்த சவுலின் முடிவைப் பாருங்கள். ஜீவனுள்ள தேவனோடு கொண்டிருந்த தொடர்பை இழந்து செத்த ஆவிகளோடு தொடர்பு கொண்டான். கடைசியில் அவன் மரணம் கொடியதாகக் காணப்பட்டது.