“யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ?” (1இராஜாக்கள் 18:13).

ஒபதியா, தேவனுடைய பிள்ளைகளுக்கு இக்கட்டான காலங்களில் செய்த உதவியைப் பார்க்கிறோம். ஆம், யேசபேல் என்ற ஒரு பொல்லாத ஸ்திரி, தேவனைப் பின்பற்றின மக்களுக்கு உபத்திரவத்தைக் கொடுத்து அவர்களை அழிக்க விரும்பினாள். ஆனால் இந்த நேரத்தில் ஒபதியா தேவனுடைய தீர்க்கதரிசிகளை ஆதரிக்கிறதைப் பார்க்கிறோம். நாம் நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய பிள்ளைகளுக்கு உதவி செய்வது மிக அவசியம். அவர்கள் தேவைகள் மத்தியில் அவர்களுக்கு உதவிச் செய்வதைக் கர்த்தர் தம்முடைய சமூகத்தில் நினைவுகூருகிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒபதியா தேவனுடைய தீர்க்கதரிசிகளுக்குச் செய்த உதவி வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறதை நாம் பார்க்கிறோம். என்ன ஒரு அருமையான மனதை அவன் கொண்டிருந்தான்! இன்றைக்குப் பொதுவாக சுயநலமுள்ள மக்கள் மத்தியில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். அநேகர் தேவனுடைய ஊழியங்களைக் குறித்து மற்ற ஆத்துமாக்களைக் குறித்து கவலைப்படுவதில்லை. ஆனால் ஒபதியா நமக்கு ஒரு முன்மாதிரி. நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய பிள்ளைகளுக்கு உதவிச் செய்ய வேண்டும் என்ற மனநிலையோடு செயல்படுவது எவ்வளவு நல்லது என்பதை நாம் பார்க்கிறோம். யேசபேல் ஒரு பொல்லாத ஸ்திரி. ஆனால் ஒபதியா தனக்கு வரும் ஆபத்தைக் குறித்தும் எண்ணாமல் இந்த உதவியைச் செய்தான். “இந்த சிறியவரில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ, அதை எனக்கேச் செய்தீர்கள்” என்று ஆண்டவர் சொல்லுகிறார். ஆகவே தேவனுடைய பிள்ளைகளுக்கு நாம் செய்யும்படியான காரியம் ஒருநாளும் தேவனால் மறக்கப்படாது.