மே 18      

“மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” (1கொரி 15:33).

இந்த இடத்தில் பவுல் நம்மை எச்சரிக்கிறார். பொதுவாக நம் பழைய வாழ்க்கையில், நாவில் பேசும்படியான பேச்சுகளில் கேலியும் பரிகாசமும் உள்ள மக்களாக வாழ்ந்திருக்கக்கூடும். அந்த நாட்களில் நம்முடைய பேச்சு ஒரு நல்ல ஒழுக்கத்துக்கு ஏதுவான பேச்சாக இல்லாமல் இருந்திருக்கும். அதில் நாம் மிகுந்த சந்தோஷத்தோடு கேலி செய்கிற ஒரு பேச்சு முறையையும் கொண்டவர்களாக வாழ்ந்திருப்போம். அப்பொழுது நாம் அதைக் குறித்து எந்தவிதத்திலும் சரியில்லை என்பதை உணராமல், தொடர்ந்து அதில் செயல்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால் தேவன் நம்மை கிருபையாய் இரட்சித்து, நாம் அவருடைய பிள்ளைகளாக மாறினபொழுது, நம்மை முழுமையாக ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறோம். நம் நாவினாலே தேவனைத் துதிக்கவும், நாவினாலே அவருடைய நாமத்தை மகிமைப்படுத்தவும், நாவினாலே அவருடைய சத்தியத்தைப் பேசவதுமே தேவை. நம்முடைய நாவு நாம் அவருடைய பிள்ளைகள் என்று சாட்சியிடுகிறது. தேவனும் அதையே எதிர்பார்க்கிறார்.

  நாவு மிக வலிமையான ஆயுதம். அது நம்முடைய வாழ்க்கையில் சரியாக உபயோகப்படுத்தப்படுமானால் அதனுடைய வலிமை மிகப் பெரியது. பலரை ஆண்டவருடைய சத்தியத்தில் கொண்டுவருவதற்கு அது பயன்படுகிறது. நாம் ஆண்டவருடைய சமூகத்தில் ஜெபிப்பதற்கு நாவை பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த நாவால் நாம் ஆண்டவரை அறிந்த பின்பு, பரியாசத்திற்கும், கேலிக்கும் உபயோகப்படுத்துவோமானால், அது நம்முடைய நல்ல ஒழுக்கங்களை பாதிக்கும். நம்முடைய சாட்சியைப் பாதிக்கும். மிகுதியான சொற்களில் பாவம் இராமல் போகாது என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே நாம் நம்முடைய நாவைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். முக்கியமாக நம்முடைய பழைய வாழ்க்கையில் இவ்விதமான கேலியும் பரிகாசமும் கொண்ட விதத்தில் பேசுகிறத் தன்மையுள்ளவர்களாக இருந்திருந்தால், மறுபடியும் அதே விதமான காரியங்கள் நம்மை பேசும்படியாக தூண்டச் செய்யும். ஆகவே நம்முடைய நாவை அடக்கியாளப் பழகுவோமாக. நாம் இந்த நாவினால் தேவனை  மகிமை படுத்தலாம் அல்லது இந்த நாவினால் நாம் தேவனை கனவீனப்படுத்தலாம். ஆகவே மோசம் போகாமல் எச்சரிக்கையாய் வாழ்வோமாக.