“என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைதாமே ஒப்புக்கொடுத்த கிறிஸ்து” (கலாத்தியர் 2:20).

பவுல் இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து இவ்விதம் சொல்லும்போது இயேசு கிறிஸ்து தம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்தது, அவர் கடந்து போன பாடுகள் வேதனைகள் அனைத்தையும் பற்றிப் வெளிப்டுத்துகிற ஒன்றாய்க் காணப்படுகிறது. ஆகவே தேவனுடைய அன்பை நான் எங்கு பார்க்கிறேன்? இயேசு கிறிஸ்துவில் பார்க்கிறேன். விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவரும் இயேசு கிறிஸ்துவே. நான் இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்க்காத ஒவ்வொரு வேளையும் நான் ஆண்டவருடைய அன்பை நோக்கிப் பார்க்கத் தவறுகின்ற ஒரு வேளை என்றே சொல்லக்கூடும். இவ்வளவு பெரிதான அன்பு என்பதை என்னுடைய வாழ்க்கையில் அங்குதான் பார்க்க முடிகிறது? கிறிஸ்துவின் வாழ்க்கையின் மூலமாக, அவர் கடந்து போன பாடுகள், வேதனைகள் மூலமாக, எனக்காக என்னை மீட்கும்படியாக என்னைப் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கும்படியாக என்னுடைய பாவத்தின் சாபத்தை அவர் சுமந்து தீர்த்தார். ஆகவே தேவ அன்பை ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் உணர வேண்டுமென்றால், அவன் பார்க்கும்படியான ஒரே நபர் இயேசு கிறிஸ்து. சிலுவையில் மாத்திரமல்ல, அவர் இந்த உலகத்தில் வாழ்ந்த ஒவ்வொரு வேளையும் பாடுகளின் வழியாய்க் கடந்து போனார். பாடு அனுபவித்தவருமாய் இருந்தார் என்று வேதம் இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சொல்லுகிறது. கிறிஸ்துவின் பாடுகள் சரீரத்தில் மாத்திரமல்ல மனதளவில் அதிகமான பாடுகளைச் சந்தித்தார் என்று பார்க்கிறோம். ஆகவே கிறிஸ்துவின் பாடுகளைப் பார்க்கும்போது அவருடைய அன்பைப் பார்க்கிறேன். இவ்வளவாய் அன்புகூர்ந்தார் என்ற அன்பை நான் நினைவுகூறுகிறேன். இந்த அன்பு என்னைப் பாதிக்கவில்லை என்றால், என்னுடைய பெருமை மனமேட்டிமை உடைக்கப்படவில்லை, என்பதும் மேலும் இந்த அன்பின் முழுமையான பாதிப்பு என்னில் ஏற்படவில்லை என்பதே உண்மை, அவ்விதமான ஒரு அன்பின் பாதிப்பை கர்த்தர் நமக்குத் தருவாராக.