“நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்” (நீதி 4:18).

நீதிமானுடைய பாதை என்பது மிக வெளிச்சமானது. அதில் நாம் தடுமாறவேண்டிய அவசியமில்லை. ஆகவே நாம் தைரியமாய் அந்தப் பாதையில் பிரயாணம் செய்யலாம். அதனுடைய பிரகாசம் சூரியப் பிரகாசத்தைப் போல இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு தடுமாற வாய்ப்பில்லாத வெளிச்சமுள்ள வாழ்க்கையாக அது காணப்படும். என்ன ஒரு ஆச்சரியமான ஆவிக்குரிய பாதை இது! ஏனென்றால் இந்தப் பாதையில் தேவன் நம்மோடு கூடப் பிரயாணிக்கிறார். ஆனால் “துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப் போல இருக்கும், தாங்கள் இடறுவது இன்னதில் என்பதை அறியார்கள்” என்றும் வேதம் சொல்லுகிறது. இந்த உலகத்தில் ஆண்டவரை அறியாதவர்களின் வாழ்க்கை என்பது ஒரு காரிருளாகவே இருக்கிறது. காரிருளில் மனிதன் நடக்கும்போது அவன் எவ்விதமாக தைரியமாக நடக்கக் கூடும்? அவன் தடுமாறுகிறவனாய்க் காணப்படுகிறான். தேவனை அறியாத ஒரு வாழ்க்கை மிகவும் நிர்ப்பந்தமானது. மேலும் தாங்கள் இடறுவது இன்னதில் என்பதை அறியார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தேவனை  அறியாத ஒரு வாழ்க்கை என்பது எவ்வளவு நிச்சயமற்றது என்பதை சிந்தித்துப் பார்ப்போம். நீதிமானுடைய வழிக்கும் துன்மார்க்கனுடைய வழிக்கும் எவ்வளவு வித்தியாசம்! தேவன் தம்முடைய கிருபையினால் நம்மை அழைத்து இந்த வெளிச்சத்தைக் கொடுத்து வழிநடத்தியிருப்பார் என்றால், எவ்வளவு பெரிய ஆசீர்வாதத்தின் பாதையாக இது இருக்கிறது! மெய்யான தேவனுடைய சமாதானத்தோடு அந்த வழியில் நடப்போம். ஆனால் துன்மார்க்கனுடைய பாதை என்பது இருள் நிறைந்தது. பயப்படக்கூடியது. நிச்சயமற்றது. நாம் நீதிமான்களுடைய பாதையில் நடப்போமாக.