கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 1               நீதியின் பாதை       நீதி 12:1–28

      “நீதியின் பாதையில் ஜீவன் உண்டு;

அந்தப் பாதையில் மரணம் இல்லை” (நீதி 12:28).

      நாம் நம்முடைய வாழ்க்கையில் எந்த பாதையில் நடக்கிறோம் என்பது மிக முக்கியமானது. அருமையானவர்களே! நம்முடைய பாதை ஒன்று ஜீவனை நோக்கி சென்று கொண்டிருக்கும் அல்லது மரணத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கும். நீதியின் பாதையை நாம் எப்பொழுதும் தெரிந்து கொள்ளுவது மிக அவசியம். ஏனென்று கேட்டால் அதில் தேவன் வைத்திருக்கிற ஜீவனுண்டு. அதில் தேவனுடைய கிருபையுண்டு, தேவனுடைய ஒத்தாசை உண்டு. ஆகவேதான்  “என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்”(நீதி 8:35) என்று வேதம் சொல்லுகிறது.

      கர்த்தரைத் தேடுவதே நம் வாழ்க்கையில் ஜீவனுக்கு போகிற வழியாகும். அவ்விதமான தேடலில் கர்த்தர் நம்மோடு கூட இருப்பது மாத்திரமல்ல, நம்முடைய எல்லா காரியங்களையும் அவர் பொறுப்பெடுத்துக் கொள்ளுவார். அந்த தேடலில் அழிவில்லை, நாசமில்லை, மோசமில்லை. நம் வாழ்க்கையில் அவரையும், அவருடைய வழியையும் நாம் தேடும்பொழுது மெய்யாலுமே ஜீவனைக் கண்டடைவோம். “நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்” (நீதி 10:16) என்று வேதம் சொல்லுகிறது.

      நீதிமான் எப்பொழுதும் ஜீவனையே நேசித்து அதில் பிரவேசிக்கப் பிரயாசப்படுவான். ஆனால் துன்மார்க்கனோ (பாவியோ) பாவத்தையே விரும்பி அதை செய்யவே தீவிரிப்பான். அதின் முடிவு நித்திய மரணமே. நீதிமான் தன்னுடைய வாழ்க்கையில் கொண்டிருக்கும் பிரயாசங்கள் அனைத்துமே நன்மைக்கு ஏதுவானவைகளாகக் காணப்படும். யார் நீதியை செய்வார்கள்? “அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்” (1 யோவான் 2:29). ஆம்! தேவனால் பிறந்தவர்கள் மாத்திரமே நீதியை செய்வார்கள். நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?