ஜனவரி 17

“அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்” (1 சாமுவேல் 2:9).

தேவன் தம்முடைய பிள்ளைகளைப் பாதுகாப்பதில் பிரியமுள்ளவராக இருக்கிறார். அவர்களின் பாதங்களைக் காப்பார் என்று சொல்லும்போது, அவர்களுடைய வழிகளை அவர் பாதுகாக்கிறார், உறுதிப்படுத்துகிறார். “நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்” (சங்கீதம் 37:23) என்று வேதம் சொல்லுகிறது. தேவனுடைய பிள்ளைகளின் நடைகளைக் கர்த்தர் உறுதிப்படுத்துகிறார். நாம் வழிவிலகிப் போகாதபடிக்கு,  தடுமாறிப் போகாதபடிக்கு, விழுந்துப்போகாதபடிக்கு நம்முடைய நடைகளை அவர் உறுதிப்படுத்துகிறார். மேலும் சங்கீதம் 37:24-ல் “அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்” என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய நடைகளை அவர் காத்துக்கொள்கிறது மாத்திரமல்ல, அவர் தமது கையினால் நம்மைத் தாங்குகிறவராக இருக்கிறார். என்ன ஒரு அருமையான கிருபையின் தேவன்! “உன் காலைத் தள்ளாடவொட்டார். உன்னைக் காக்கிறவர் உறங்கார்” (சங்கீதம் 121:3). அவர் நம்மைக் காக்கிறவராக இருக்கிறபடியால் நம் நிழலாயிருக்கிறார். “கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்” (சங்கீதம் 121:5). நிழலை நம்மைவிட்டுப் பிரிக்க முடியுமா? முடியாது. நாம் எங்குச் சென்றாலும் நிழல் நம் கூடவே இருக்கிறது. அவ்விதமாக தேவன் எப்பொழுதும் எல்லாக் காலங்களிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் கூடவே இருக்கிறபடியால், நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அவர் நம்மைக் காக்கிறவர். அவர் எப்பொழுதும் நம்முடைய நடைகளைக் காத்து உறுதிப்படுத்துகிறவராக இருக்கிறார். இந்த தேவனை நாம் பற்றிக்கொண்டு, அவர் நம்மோடுகூட இருக்கிறவராக நம்முடைய வாழ்க்கையில் நம்மைப் பாதுகாக்கிறவராக இருக்கிறார் என்பதை  உறுதியாய்ச் சார்ந்து, அவருடைய அன்பில் நிலைத்திருப்போமாக.