“என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்” (ஏசாயா 50:8).

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகளை தீர்க்கதரிசனமாக ஏசாயா இங்கு சொல்லுகிறார். நம்முடைய வாழ்க்கையில் நாம் பாவிகள்தான். நம் நீதியைக் குறித்து நாம் பெருமைபாராட்ட ஒன்றுமில்லை. ஆனால் நம்மை நீதிமானாக்குகிறவர் தேவன். ஆகவேதான் ரோமர் நிருபத்தில் “பாவியை நீதிமானாக்குகிறவர்” என்று சொல்லப்படுகிறது. இந்த உலகத்தில் நம்மை நாமே நீதிமானாக்கிக்கொள்ள முடியாது. நாம் பாவ வழியில் போகக்கூடிய மக்கள். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் நம்மை நீதியான வழியில் நம்மைத் திருப்பி, நீதியின் காரியங்களைக் செய்யக்கூடிய ஒரு மகத்துவமான மாற்றத்தை நமக்குக் கொடுப்பது மாத்திரமல்ல, கிறிஸ்துவின் நீதியைத் தரித்து வாழக்கூடியவர்களாய் நாம் காணப்படுவோம். அவ்விதமாக வாழக்கூடிய ஒரு வாழ்க்கையின் மூலமாக நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை இந்த உலகத்தில் வெளிப்படுத்துகிறவர்களாகக் காணப்படுவோம். தேவன் நமக்குத் துணையாக இருக்கும்பொழுது நாம் வெட்கப்பட்டுப் போவதில்லை. 7ஆம் வசனத்தில் ‘கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.’ ஆகவே நம்முடைய வாழ்க்கையின் எந்தச் சூழ்நிலையிலும் தைரியமாய் இவ்விதமாக அறிக்கைசெய்வோம். நிச்சயமாக நாம் வெட்கப்பட்டுப் போக அவர் விடமாட்டார்.