ஜனவரி 10

 “கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்” (2சாமுவேல் 22:29).

ஒருவேளை இந்த நாட்களில் நம் வாழ்க்கையானது, இருளில் நடப்பதுபோன்ற ஒரு சூழலில் காணப்படுகின்றதா? அப்படியானால் இங்கு சொல்லுகிறபடியாக, தேவன் நம்முடைய விளக்காக இருக்கிறார். ஆகவே அவர் இருளை வெளிச்சமாக்குவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. அவருடைய அன்பு நம்மை எப்போதும் இருளில் வாழும்படியாக விட்டுவிடாமல், அதிலிருந்து நம்மை மீட்கிறார். அதற்குரிய காலத்தையும் நேரத்தையும் கர்த்தர் நியமித்திருக்கிறார். அதற்காக நாம் காத்திருப்போம். சோர்ந்துபோகாமல் நாம் காத்திருக்கும்போது நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையில் அதனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். சங்கீதம் 97:11 -ல் “நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது” என்று வேதம் சொல்லுகிறது. தேவனுடைய பிள்ளைகள் இருளில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இருளினால் வழிநடத்தப்பட வேண்டிய அவசியமுமில்லை. ஆகவே நாம் வெளிச்சத்தை எதிர்நோக்கி விசுவாசத்தோடு காத்திருப்போம். “செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன்” (சங்கீதம் 112:4).  ஒருவேளை நம்முடைய வாழ்க்கை இருளில் காணப்படுகிற ஒரு நிலையாக இருந்தாலும், தேவன் வெளிச்சத்தை உதிக்கச் செய்வார் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. வேதம் சொல்லுகிறபடியே, கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமாக இருப்பார் (ஏசாயா 60:20). அவர் நம்மை வெளிச்சத்தின் பாதையில் வழிநடத்திச் செல்லுவார். இருளில் இருந்து நம்மை நீக்கி, நாம் வெளிச்சத்தில் நடக்கிற பிள்ளைகளைப் போல, செவ்வையாய் நடக்கவும் நீதியாய் நடக்கவும் நமக்கு அவர் கிருபையைக் கொடுப்பார். ஆமென்!